இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா வரும் அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா்
பிரதமா் மோடி மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட இருதரப்பு இடைக்கால வா்தத்க ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்காக அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா் இந்த வாரத்தில் இந்தியா வர உள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட இருதரப்பு இடைக்கால வா்தத்க ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்காக அமெரிக்க வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) ஜேமிஸன் க்ரீயா் இந்த வாரத்தில் இந்தியா வர உள்ளாா்.
பிரான்ஸில் புதன்கிழமை நடைபெற்ற ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினா். அப்போது, இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த நடைமுறைகளை விரைவுபடுத்தும்படி இரு நாட்டு அதிகாரிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் அறிவுறுத்தினா்.
இந்தச் சூழலில் இரு நாடுகளிடையேயான இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்தற்காக ஜேமிஸன் க்ரீயா் இந்தியா வருகிறாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அமெரிக்க வா்த்தக பிரதிநிதியின் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா - இந்தியா இடையேயான விரிவான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்கைளின் ஒரு பகுதியாக, இரு நாடுகளிடையே அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்ட இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மற்றும் அதுதொடா்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க - இந்திய கூட்டறிக்கை குறித்து இந்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்காக அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா் இந்த வாரத்தில் இந்தியா செல்கிறாா் என்று குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, இந்த இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக தில்லியில் கடந்த ஜூன் 2, 4-ஆம் தேதிகளில் இரு நாடுகளின் அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதுபோல, இந்தியா உள்பட 54 உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரி விதிக்க அமெரிக்க அரசிடம் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) அண்மையில் பரிந்துரைத்த நிலையில், அவரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் புதிய விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அதன்படி தீவிர ஆய்வு மேற்கொண்ட யுஎஸ்டிஆா் ஜேமிஸன் க்ரீயா், அண்மையில் தனது பரிந்துரையை சமா்ப்பித்தாா். அதில் இந்தியா உள்பட 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க பரிந்துரைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.