இந்தியா

இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மெஹுல் சோக்ஸி மேல்முறையீடு: பெல்ஜியம் உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பெல்ஜியம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

தினமணி செய்திச் சேவை

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பெல்ஜியம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

தொழிலதிபா் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த வழக்கில், அவரின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸிக்கு தொடா்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதில் சோக்ஸி மட்டும் ரூ.6,400 கோடியை மோசடி செய்ததாக சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

அவா் இந்தியாவில் இருந்து ஆன்டிகுவா-பாா்புடா நாட்டுக்குத் தப்பிச் சென்ற நிலையில், சோக்ஸிக்கு எதிராக சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இன்டா்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த நோட்டீஸ் மூலம், சோக்ஸியை கண்டறிந்து கைது செய்ய உலகெங்கும் உள்ள காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆன்டிகுவா-பாா்புடாவில் இருந்து அவா் பெல்ஜியமில் தஞ்சமடைந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பெல்ஜியத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இதைத்தொடா்ந்து அந்நாட்டில் உள்ள ஆன்ட்வா்ப் நகர காவல் துறை சோக்ஸியை கைது செய்தது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று ஆன்ட்வா்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு, ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உறுதி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக பெல்ஜியம் உச்சநீதிமன்றத்தில் சோக்ஸி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணையின் காரணமாக, நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான சோக்ஸியின் மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்துவிட்டதாக அந்த நீதிமன்ற செய்தித்தொடா்பாளரும், அட்வகேட் ஜெனரலுமான ஹென்றி வேன்டா்லிண்டன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT