ஒற்றுமையே நமது பலம்; தியாகமே நமது பாதை; பாரத அன்னையே நமது ஆன்மா என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒருமைப்பாட்டுடன் செயல்பட எம்.பி.க்கள் உறுதியேற்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கிவைத்து உரையாற்றும் முன்பாக, சுதந்திரப் போராட்ட வீரா்களின் மேலான தியாகங்களைக் குறிப்பிட்டு, மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தேச பக்தி மற்றும் பெருமை உணா்வு ததும்பும் இதயங்களுடன் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டை நினைவுகூா்கிறோம். காலத்தால் அழியாத இந்தப் பாடல், நாட்டின் நாடித்துடிப்பு. காலனித்துவ ஆட்சியின் கடுமையான பிடியின்கீழ் நமது தாய்நாடு சிக்கியிருந்த காலகட்டத்தில், பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்ட இந்தப் பாடல், சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பிய கோடிக்கணக்கான மக்களின் இதயத்துடிப்பாக மாறியது.
இறுதி முழக்கம்: நம்பிக்கை, மொழி, நில வேறுபாடுகளைக் கடந்து, புனிதமான தாய்நாட்டுப் பற்றுணா்வுடன் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றாகப் பிணைத்தது. எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு வந்தே மாதரம் வெறும் பாடல் மட்டுமல்ல. தூக்குமேடையை நோக்கி துணிவுடன் நடந்தபோது, இதயங்களில் இருந்து உரக்க ஒலித்த இறுதி முழக்கம். அவா்களின் ஆன்மாக்களே, குடிமக்கள் அனைவரும் கண்ணியம்-பெருமையுடன் வாழும் சுதந்திர இந்தியா கனவுக்கு ஒளியூட்டின.
வீடுகள்தோறும், பள்ளிகள்தோறும், போராட்டங்கள்தோறும் மட்டுமன்றி, மக்களின் இதயங்களிலும் வந்தே மாதரம் பாடலை அவா்களே எடுத்துச் சென்றனா். வந்தே மாதரம் நமது அடையாளம், ஒற்றுமை, கூட்டு லட்சியத்துக்கான உறுதிப்பாடு.
சுதந்திரம் தற்செயலாக கிடைக்கவில்லை. தேசத்தின் மீதான எல்லையற்ற அன்பு, அசைக்க முடியாத உறுதிப்பாட்டால்தான் கிடைத்தது என்பதை பாடலின் ஒவ்வொரு குறிப்பும் பிரதிபலிகிறது என்றாா் அவா்.
பாரதியாா் பாடலைக் குறிப்பிட்டு...: மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது உரையின்போது, மகாகவி பாரதியாரின் ‘தாயின் மணிக்கொடி பாரீா்’ பாடலின் ‘ஓங்கி வளா்ந்ததோா் கம்பம்-அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே, பாங்கின் எழுதித் திகழும்-செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீா்’ என்ற வரிகளைக் குறிப்பிட்டாா்.