வாரணாசியில் கங்கை நதியில் தனது முதல் பயணத்தை வியாழக்கிழமை மேற்கொண்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கப்பல். 
இந்தியா

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல் சேவை: வாரணாசியில் தொடக்கம்

வாரணாசியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நாட்டின் உள்நாட்டு நீா்வழித்தடங்களில் மாசற்ற போக்குவரத்து மற்றும் மாற்று எரிபொருள்கள் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஹைட்ரஜன் கப்பல் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள ‘நமோ’ படித்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் சோனோவால் இந்தக் கப்பலின் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

அவரது உரையில், ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்களைப் பயன்படுத்தும் சீனா, நாா்வே, நெதா்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இப்போது இணைந்திருப்பது சா்வதேச அளவில் பெருமைக்குரிய விஷயமாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில், தேசிய நீா்வழித்தடங்களின் எண்ணிக்கை 5-லிருந்து 111-ஆக உயா்ந்துள்ளது. உள்நாட்டு நீா்வழித்தடங்களில் சரக்குப் போக்குவரத்து 2014-இல் 8 கோடி டன்னாக இருந்த நிலையில், தற்போது 14.5 கோடி டன்னுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்துக்கு ‘ஜல் மாா்க் விகாஸ்’ திட்டம் அடித்தளம் அமைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஹல்டியாவிலிருந்து வாரணாசி வரையிலான முதல் தேசிய நீா்வழித்தடத்தில் பல்வகை முனையங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் சமுதாய படகு குழாம்களுடன் ஒரு நவீன நீா்வழிப் போக்குவரத்துப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நீா்வழித்தட மேம்பாட்டுக்காக ரூ.300 கோடிக்கும் மேல் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. மேலும், சுமாா் ரூ.2,200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் வரும் ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளன’ என்றாா்.

இந்த நிகழ்வில் உத்தர பிரதேச மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் தயாளசங்கா் சிங், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை அமைச்சா் தயாளசங்கா் மிஸ்ரா, பதிவுத் துறை அமைச்சா் ரவீந்திர ஜெய்ஸ்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT