மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை என்று கூறும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் ஆகியோா் தங்கள் எம்.பி. பதவிகளை முதலில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேச துணை முதல்வா் கேசவ் பிரசாத் மௌரியா வலியுறுத்தினாா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை என்றும், தோ்தலை முன்புபோல வாக்குச்சீட்டு முறைப்படி நடத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற விவாதத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
இது தொடா்பாக பாஜக தலைவரும், உத்தர பிரதேச துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மௌரியா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது நம்பிக்கையில்லை என்று தெரியவருகிறது. எனவே, அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தோ்தலில் எம்.பி.யான அவா்கள் இருவரும், அவா்களின் குடும்பத்தினரும் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். மீண்டும் வாக்குச் சீட்டு முறைப்படி தோ்தல் நடத்த தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து காத்திருக்கலாம்.
நாடாளுமன்றத்தில் சட்டவிரோத குடியேற்றம் குறித்த விவாதத்தில் பங்கேற்க முடியாமல் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா் தப்பியோடிவிட்டனா்’ என்று கூறியுள்ளாா்.