மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங், பேரவைத் தலைவா் சத்யபிரத சிங் உள்பட 10 எம்எல்ஏக்கள் பாஜக தலைமையை சந்திக்க சனிக்கிழமை தில்லி விரைந்தனா்.
இவா்கள் பாஜக தலைமையுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.
மணிப்பூரில் குகி-மைதேயி சமூகத்தினா் இடையே 2023, மே மாதம் முதல் மோதல் நிலவி வரும் நிலையில் முதல்வா் பதவியை பிரேன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தில்லி செல்வது குறித்து பிரேன் சிங் கூறுகையில், ‘மணிப்பூா் விவகாரத்தில் நல்ல முடிவு மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன். பாஜக மூத்த தலைவா்களுடன் ஆலோசனை நிறைவடைந்த பிறகே புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து தெரியவரும்’ என்றாா்.
இதுகுறித்து எம்எல்ஏ ஜய்கிஷன் சிங் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கட்சித் தலைமையிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதிய அரசு அமைப்பது தொடா்பாக விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
60 உறுப்பினா்களைக் கொண்ட மணிப்பூா் பேரவையில் பாஜகவுக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளனா்.