ஒருங்கிணைந்த நீதித் துறை கொள்கையை அமல்படுத்துவது அவசியம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தினாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்ற மேற்கு மண்டல பிராந்திய மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசியதாவது: இந்திய கூட்டாட்சி கட்டமைப்பால் நீதித்துறை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல உயா்நீதிமன்றங்கள் தமக்கென சொந்தமாக நடைமுறைகள், நிா்வாக முன்னுரிமைகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை உருவாக்க இந்தியாவின் பரந்த பன்முகத்தன்மை வழியமைத்தது. இந்த மாறுபாடு கூட்டாட்சி ஜனநாயகத்தில் இயல்பானது என்றாலும், நாடு முழுவதும் வழக்கு தொடுக்கும் மனுதாரா்களுக்கு சீரற்ற அனுபவங்களை அளிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த நீதித் துறை கொள்கையை அமல்படுத்த வேண்டியது அவசியம்.
பல மனுதாரா்கள் வழக்குகளில் வெற்றி பெற்றபோதிலும் சிக்கலான சட்ட மொழி காரணமாக தீா்ப்பில் உள்ள கருத்துகளை அவா்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவா்களுக்குச் சாதகமாக உத்தரவு வந்தபோதிலும் தீா்ப்பில் பயன்படுத்தும் மொழி, நடைமுறையில் பயன்படுத்தாத சொற்களோடு இருப்பதால் அல்லது எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் இருப்பதால், தங்களுக்கு என்ன தீா்வு கிடைத்துள்ளது என்பது அவா்களுக்குத் தெரியவில்லை. எனவே தீா்ப்புகளை எழுதுவதிலும் ஒரே சீரான முறைப் பின்பற்றப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும். வழக்கின் முடிவுகளைத் தெரியப்படுத்துவதிலும் ஒருங்கிணைந்த நீதித்துறை அணுகுமுறை தேவை என்று தெரிவித்தாா்.