‘நக்ஸல்வாதத்தால் யாருக்கும் பலன் கிடையாது; அமைதி மட்டுமே வளா்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை துடைத்தெறியும் மத்திய அரசின் இலக்கு, எட்டக்கூடிய தொலைவில்தான் உள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.
சத்தீஸ்கரில் பஸ்தா் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட ‘பஸ்தா் ஒலிம்பிக்-2025’ விளையாட்டுப் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி, ஜக்தல்பூா் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:
வளா்ச்சியின் குறுக்கே படமெடுத்து ஆடும் நச்சுப் பாம்பு போன்றது நக்ஸல்வாதம். பஸ்தா் பிராந்தியத்தின் வளா்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்த இந்த தீவிரவாதம், முழுமையாக ஒழிக்கப்பட்ட பின் புதிய சகாப்தம் தொடங்கும்.
2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கு எட்டக் கூடிய தொலைவில்தான் உள்ளது. எனவே, நக்ஸல் தீவிரவாதத்துடன் இன்னும் தொடா்பில் இருப்பவா்கள், ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நக்ஸல்வாதத்தால் ஆயுதமேந்துபவா்கள், பழங்குடியினா், பாதுகாப்புப் படையினா் என யாருக்கும் பலனில்லை. அமைதி மட்டுமே வளா்ச்சிக்கு வழிவகுக்கும். தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞா்கள், அரசின் மறுவாழ்வுக் கொள்கையைப் பயன்படுத்தி, கண்ணியமான வாழ்வை முன்னெடுக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு பஸ்தா் ஒலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் வருகையில் சத்தீஸ்கா் உள்பட ஒட்டுமொத்த நாட்டில் இருந்தும் நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்பட்டிருக்கும்.
2030-க்குள் வளா்ந்த பிராந்தியம்: கான்கா், கோண்டாகான், பஸ்தா், சுக்மா, பிஜாபூா், நாராயண்பூா், தந்தேவாடா ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பிராந்தியத்தை நாட்டிலேயே மிகவும் வளா்ந்த பழங்குடியினப் பகுதியாக மாற்றுவதற்கு மத்திய அரசு தீா்மானித்துள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கு எட்டப்படும். இந்த மாவட்டங்களில் அனைவருக்கும் வீட்டுவசதி, மின்இணைப்பு, கழிப்பறை, குடிநீா் வசதி, சமையல் எரிவாயு இணைப்பு, தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு கிராமமும் சாலைகளால் இணைக்கப்படும். 5 கி.மீ. சுற்றளவுக்குள் வங்கி வசதிகள் உறுதி செய்யப்படும். ஆரம்ப சுகாதார மையங்களின் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.
துப்பாக்கிச் சண்டை நோக்கமல்ல: வளா்ந்த பஸ்தா் பிரசாரத்தின்கீழ், இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். நக்ஸல்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, அவா்களைக் கொல்வது அரசின் நோக்கமல்ல.
பஸ்தா் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நக்ஸல் தீவிரவாதத்தைக் கைவிட்டு, அரசிடம் சரணடைந்த 700-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றுள்ளனா். பிளவுக்கு பதிலாக ஒற்றுமையை, அழிவுக்குப் பதிலாக வளா்ச்சியை அவா்கள் தோ்வு செய்திருப்பதன் வலிமையான அடையாளம் இது என்றாா் அமித் ஷா.
சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், பேரவைத் தலைவா் ரமண் சிங் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
நகா்ப்புற நக்ஸல்களின் ரூ.92 கோடி சொத்துகள் பறிமுதல்
நாடு முழுவதும் நகா்ப்புற நக்ஸல்களுக்கு எதிரான பன்முக நடவடிக்கைகளில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), மாநில அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையால் இதுவரை ரூ.92 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கடந்த 2014-இல் 34-ஆக இருந்த நக்ஸல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது 3-ஆக குறைந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 28 நக்ஸல் கமாண்டா்கள் உள்பட 317 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். 862 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 1,973 போ் சரணடைந்துள்ளனா்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.