திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு எதிராக அவர் சார்ந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பெண் நிர்வாகியால் சமூக ஊடக தளத்தில் பதிவேற்றப்பட்ட அவதூறு பதிவு சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தப் பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கோட்டையாக கருதப்பட்ட கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற இடதுசாரி முன்னணியிலிருந்து, பெண் உறுப்பினரான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் இளம் மேயர்(21 வயதில்) என்ற பெருமையுடன் பதவியேற்று தேசிய அளவில் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில், கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று(டிச. 13) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இன்று(டிச. 13) அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி, திருவனந்தபுரம் மாநகராட்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி(மொத்தமுள்ள 101 வார்டுகளில் 50-இல் வெற்றி) 40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மாநில தலைநகரில் கோலோச்சி உள்ளது. இதையடுத்து, கடந்த தேர்தலில் வெற்றி பெற்று இளம் வயது மேயராகப் பதவியேற்ற ஆர்யா ராஜேந்திரன்(26) பதவி இழக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இத்தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி படுதோல்வியைத் தழுவ மேயர் ஆர்யா ராஜேந்திரன் முக்கிய காரணம் என்று அவரது பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர் சார்ந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி காயத்ரி பாபு சமூக ஊடக தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துப்பதிவை பதிவேற்றினார். மேயரின் நடவடிக்கைகள் மாநகரின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில் இல்லாமல், தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்தப் பதிவு பலதரப்பு கவனத்தையும் ஈர்த்து விமர்சனத்தை பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதிவை அவர் உடனடியாக நீக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.