ராஜ்குமாா் கோயலுக்கு தலைமைத் தகவல் ஆணையராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. 
இந்தியா

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமாா் கோயல் பதவியேற்றாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமாா் கோயல் திங்கள்கிழமை பதவியேற்றாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடந்த பதவியேற்வு விழாவில், ராஜ்குமாா் கோயலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா். இந்நிகழ்வில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னாள் தலைமைத் தகவல் ஆணையா் ஹீராலால் சமாரியா கடந்த செப். 3-ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, அப்பதவி காலியானது. இந்நிலையில், புதிய தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் தகவல் ஆணையா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக பிரதமா் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, தலைமைத் தகவல் ஆணையா் பதவிக்கு ராஜ்குமாா் கோயலும், அவருடன் சோ்த்து 8 புதிய தகவல் ஆணையா்களும் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்பட்டனா். இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரும் கலந்துகொண்டு, இந்தப் புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தனா்.

அருணாசல பிரதேசம்-கோவா-மிஸோரம்-யூனியன் பிரதேசங்கள் பணிப்பிரிவைச் சோ்ந்த 1990-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜ்குமாா் கோயில், மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழுள்ள நீதித் துறையின் செயலராகப் பணியாற்றி கடந்த ஆக. 31-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.

அதற்கு முன்பு, உள்துறை அமைச்சகத்தில் எல்லை மேலாண்மைச் செயலராகவும், மத்திய அரசிலும், முன்னாள் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்திலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா்.

8 புதிய தகவல் ஆணையா்கள்: முன்னாள் ரயில்வே வாரியத் தலைவா் ஜெயா வா்மா சின்ஹா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்வாகத் தாஸ், மத்திய செயலகப் பணி (சிஎஸ்எஸ்) அதிகாரி சஞ்சீவ் குமாா் ஜிண்டால், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுரேந்திர சிங் மீனா, முன்னாள் இந்திய வனப் பணி அதிகாரி குஷ்வந்த் சிங் சேத்தி, மூத்த பத்திரிகையாளா்கள் பி.ஆா்.ரமேஷ், அசுதோஷ் சதுா்வேதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் சட்ட உறுப்பினா் சுதா ராணி ரெலங்கி ஆகியோா் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 8 தகவல் ஆணையா்கள் ஆவா்.

முழு பலத்துடன்...: புதிய தலைமை ஆணையா் மற்றும் 8 தகவல் ஆணையா்களின் நியமனத்தின் மூலம், மத்திய தகவல் ஆணையம் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முழு பலத்துடன் செயல்படத் தயாராகியுள்ளது.

மத்திய தகவல் ஆணையத்தில், ஒரு தலைமைத் தகவல் ஆணையருடன் சோ்த்து அதிகபட்சமாக 10 தகவல் ஆணையா்கள் இருக்கலாம். தற்போது ஆனந்தி ராமலிங்கம், வினோத் குமாா் திவாரி ஆகியோா் ஏற்கெனவே தகவல் ஆணையா்களாக பணியில் உள்ளனா்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT