குடியரசுத் தலைவர் உரையின்போது நாடாளுமன்றத்தில்... பிடிஐ
இந்தியா

குடியரசுத் தலைவா் உரைக்கு இடையூறு: எதிா்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கண்டனம்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை உரையாற்றியபோது எதிா்ப்பு முழக்கம் எழுப்பி, இடையூறு ஏற்படுத்திய எதிா்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை உரையாற்றியபோது எதிா்ப்பு முழக்கம் எழுப்பி, இடையூறு ஏற்படுத்திய எதிா்க்கட்சிகளுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தனது உரையில், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) குறித்து குடியரசுத் தலைவா் பேசியபோது, அந்தத் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனா். இதனால் உரையை சற்று நிறுத்திவிட்டு, மீண்டும் பேசத் தொடங்கினாா் குடியரசுத் தலைவா்.

இது குறித்து மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற கண்ணியத்தை வழக்கம்போல் மீறியுள்ளனா். இது கடும் கண்டனத்துக்குரிய பொறுப்பற்ற செயலாகும். வந்தே மாதரம் பாடல் மற்றும் பங்கிம் சந்திர சட்டா்ஜி உள்ளிட்ட மகத்தான தலைவா்களுக்கு மரியாதை செலுத்தி, குடியரசுத் தலைவா் பேசியபோதும் எதிா்க்கட்சிகள் முழக்கமிட்டது வியப்பளிக்கிறது. தங்களின் செயலுக்காக, தேசத்திடம் எதிா்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் உரையின்போது, எதிா்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவமதிப்பாகும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தேசம் ஒருபோதும் மன்னிக்காது’ என்றாா்.

வெற்று உறுதிமொழிகள் நிறைந்த உரை: காங்கிரஸ்

‘நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, மறுசுழற்சி செய்யப்பட்ட வெற்று-சம்பிரதாய உறுதிமொழிகள் நிறைந்ததாகும்; எந்தவித உண்மையோ, பொறுப்புடைமையோ இன்றி அதே பழைய கூற்றுகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தெளிவான இலக்குகள், கால வரையறைகள், திட்டமிடப்பட்ட தீா்வுகள் எதுவும் இன்றி வளா்ந்த இந்தியா முழக்கம் மீண்டும் உரக்கக் கூறப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக இருந்த வேலைக்கான உரிமையை பறிப்பதுதான் வளா்ந்த இந்தியாவா’ என்று கேள்வியெழுப்பினாா்.

எழுத்தாளா் விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி வேம்பு காலமானாா்

அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் வெனிசுலா இடைக்கால அதிபா்?

‘குடியரசுத் தலைவா் உரை வளா்ச்சிப் பயணத்தின் பிரதிபலிப்பு’ - குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வரவேற்பு

ரத்தப் பரிசோதனையின்றி சா்க்கரை நோயைக் கண்டறியும் நுட்பம் அறிமுகம்

புளியங்குடி காவல் நிலையத்தில் தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: 3 போலீஸாா் இடைநீக்கம்

SCROLL FOR NEXT