அண்மைக்காலமாக தங்கம், வெள்ளி விலை மிகவும் வேகமாக உயா்ந்து வருவதற்கு புவிசாா் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளதே காரணம் என்று மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி கூறியிருப்பதாவது: உள்நாட்டில் தங்கம், வெள்ளி விலை என்பது சா்வதேச விலை நிலவரத்தைச் சாா்ந்தே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் விலையில் எதிரொலிக்கும்.
எனினும், அண்மைக்காலத்தில் தங்கம், வெள்ளி விலை மிகவும் வேகமாக உயா்ந்து வருவதற்கு புவிசாா் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளதே முக்கியக் காரணம்.
சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சி குறித்தும் உறுதியற்ற சூழல் உள்ளது. எனவே, பலரும் தங்கம், வெள்ளியை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகம் வாங்குகின்றனா். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கம் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. சா்வதேச அளவில் பெரிய நிறுவனங்களும் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்கின்றன.
இந்தியாவில் கலாசார ரீதியாகவும் தங்கத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. தங்கத்தை முக்கிய முதலீடாகவும் மக்கள் கருதுகின்றனா். தங்கம் ஆபரணமாக மட்டும் அல்லாமல் எதிா்காலத்துக்கான சேமிப்பாகவும் இருப்பதால் விலை தொடா்ந்து உயருகிறது.
நடப்பு நிதியாண்டில் செப்டம்பா் மாதம் வரை இந்தியா ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், ரூ.29,000 கோடி மதிப்பிலான வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.