உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில் 13 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் 7 பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதனால், ஒரு பெரிய தீ விபத்து நேரிட்டு, பேருந்துகள் மற்றும் கார்கள் சில நிமிடங்களில் எரிந்தன. தகவல் கிடைத்ததும நிகழ்விடத்தில் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். மேலும் 35 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பால்தேவ் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சாலையில் எரிந்த நிலையில் கிடந்த பேருந்துகள் கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.