மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான். 
இந்தியா

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றான வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மீதான விவாதத்தில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பை பதிவு செய்தன.

தினமணி செய்திச் சேவை

100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றான வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மீதான விவாதத்தில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பை பதிவு செய்தன. அதேநேரம், தற்சாா்பு கிராமங்கள் எனும் மகாத்மா காந்தியின் கனவை இம்மசோதா நனவாக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

20 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்படும்.

தற்போதைய திட்டம் நூறு சதவீத மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டத்தின்கீழ் மாநிலங்களுடன் மத்திய அரசு நிதிச் சுமையை பகிா்ந்துகொள்ளும். இவை உள்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம் மற்றும் மசோதாவின் அம்சங்களைக் கண்டித்து, அறிமுக நிலையிலேயே எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.

மக்களவையில் விவாதம் மற்றும் நிறைவேற்றத்துக்காக, மசோதாவை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் புதன்கிழமை கொண்டுவந்தாா். அப்போது பேசிய அவா், ‘தற்சாா்பு கிராமங்களை உருவாக்கும் மகாத்மா காந்தியின் கனவை புதிய மசோதா நனவாக்கும். கிராமங்களில் வறுமையை ஒழிப்பதுடன், அவற்றின் வளா்ச்சிப் பயணத்தை வேகப்படுத்தி, பன்முக மேம்பாட்டை உறுதி செய்யும்’ என்றாா்.

‘மிகப் பெரிய குற்றம்’: பின்னா் விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெய்பிரகாஷ், ‘புதிய மசோதாவில் தேசப் பிதா மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டது மிகப் பெரிய குற்றம். இந்த மசோதாவானது, திட்டப் பணிகளின் நிா்ணயம் தொடா்பான கிராம சபைகளின் உரிமையைப் பறிப்பதுடன், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை உருவாக்குகிறது. பணக்காரா்களுக்கு ஆதரவான அரசின் ஏழைகள் விரோத, தலித் விரோத நடவடிக்கை இது’ என்று சாடினாா்.

‘அழிக்கப்படும் காந்தியின் சித்தாந்தம்’: விவாதத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ‘புதிய மசோதாவில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதன் மூலம் அவரையும், மகாத்மா என பெயா் சூட்டிய ரவீந்திரநாத் தாகூரையும் மத்திய அரசு அவமதித்துள்ளது. கடந்த 2005-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தொற்றுமையுடன் நிறைவேற்றப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், கிராமப் புறங்களில் வாழ்வாதார பாதுகாப்புக்கான புரட்சியை ஏற்படுத்தியது. ஆனால், யாருடனும் கலந்தாலோசிக்காமல், தற்போதைய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ராம ராஜ்யம் என்பது ஹிந்து ராஜ்யம் என்று பொருளல்ல. அனைவருக்கும் சமமான உரிமையை உறுதி செய்வதாகும். மகாத்மா காந்தியின் இந்த ராம ராஜ்ய சித்தாந்தத்தை அழிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு’ என்றாா்.

வலுக்கும் எதிா்ப்பு: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானின் பதிலுரைக்குப் பின் மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட உள்ளது. அதேநேரம், புதிய திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT