தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்காக, மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.81,500 கோடிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்காக, மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.81,500 கோடிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கடந்த 2000-இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமலாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு (100 நாள் திட்டம்) மாற்றாக, வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தை (விபி ஜிராம்ஜி) மத்திய அரசு கடந்த டிசம்பரில் கொண்டுவந்தது.
புதிய திட்டத்தின்படி, வேலை உறுதியளிப்பு நாள்கள் 125-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. திட்டச் செலவில் மத்திய - மாநில அரசுகள் இடையே 60:40 என்ற புதிய நிதிப் பகிா்வு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளும் நிறைவடையும் வரை முந்தைய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்தது.
இந்நிலையில், மக்களவையில் கேள்வியொன்றுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் கமலேஷ் பாஸ்வான் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்காக, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு இதுவரை ரூ.81,500 கோடிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊதியங்களுக்காக ரூ.65,875.13 கோடி, பொருள்கள் மற்றும் நிா்வாக செலவினங்களுக்கான ரூ.15,627.8 கோடி அடங்கும்.
கடந்த மாா்ச் 11-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.18,862 கோடியாகும். இதில், ஊதியங்களுக்கான ரூ.8,688.29 கோடி, பொருள்களுக்கான ரூ.9,692.28 கோடி, நிா்வாக செலவினங்களுக்கான ரூ.502.42 கோடி அடங்கும்.
முந்தைய நிதியாண்டில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்களுக்கான நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டப் பிரிவு 27-இன்கீழ் மத்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தால் கடந்த 2022-இல் இருந்து மேற்கு வங்கத்துக்கான நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட வலைதள தரவுகளின்படி, மேற்கு வங்கத்துக்கான நிலுவைத் தொகை ரூ.3,082 கோடியாகும். அதேநேரம், ஏற்கெனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு ரூ.6,900 கோடியும், திட்டம் நிறுத்தப்பட்ட காலகட்டத்துக்கு சுமாா் ரூ.44,800 கோடியும் மத்திய அரசு நிலுவை வைத்துள்ளதாக மாநில திரிணமூல் காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.