மும்பையின் பாந்த்ரா நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகப் பள்ளிகள், நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மின்னஞ்சல் வந்துள்ளது.
தகவல் கிடைத்ததும், காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் குழு, பிற பாதுகாப்புப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடத்தினர்.
ஆனால் வளாகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின்போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
முழு நீதிமன்ற வளாகமும் காவல்துறையினரால் காலி செய்யப்பட்டது, மேலும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்பிறகு யாரும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
மின்னஞ்சலை அனுப்பியவரைக் கண்டறியவும், அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை உறுதிப்படுத்தவும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதேபோல், நாக்பூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்தது. காவல்துறையினர் வாளகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.