பாட்னா, உத்தரகண்ட், ஜாா்க்கண்ட், மேகாலயம், சிக்கிம் ஆகிய 5 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் பெயா்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் குழு மேற்கொண்ட முடிவுகளின்படி, உத்தரகண்ட் உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் குப்தா, மேகாலய உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி ரேவதி பி மோஹிதே தேரே, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சோனக், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதி சங்கம் குமாா் சாஹு, சிக்கிம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கேரள உயா்நீதிமன்ற நீதிபதி முகமது முஷ்தாக் ஆகியோரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேகாலய உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி செளமன் சென், கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பதவி வகிக்கும் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெறுவதை கருத்தில் கொண்டு, இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.