எஸ்ஐஆர் எதற்காகக் கொண்டு வரப்பட்டது? என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனையும் எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையில், அஸ்ஸாமில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
முதல் மாநிலமாக எஸ்ஐஆா், பிகாரில் கடந்த ஜூன் இறுதியில் தொடங்கி நிறைவுற்றது. அதனைத்தொடர்ந்து, அங்கு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தொடர்ந்து, அங்கு பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
பிகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த எஸ்ஐஆா் பணியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் திருத்தப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. மேற்கு வங்க வரைவு வாக்காளா் பட்டியலில் 58,20,898 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் சுமாா் 41.8 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எஸ்ஐஆா் பணி கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. வரைவுப் பட்டியலின்படி மொத்தம் 97.37 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், இது குறித்து, அஸ்ஸாமில் இன்று(டிச. 20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: “வட கிழக்குப் பகுதிகளில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக செய்த தவறுகளை பாஜக அரசு சரி செய்து வருகிறது. வனப் பகுதிகளையும் நிலத்தையும் ஆக்கிரமித்து, அஸ்ஸாமின் பாதுகாப்புக்கும் அடையாளத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் பாதுகாப்பு வழங்கி வந்தது.
இந்த நிலையில், ஊடுருவல்காரர்களைத் தேர்தல் நடைமுறைகளிலிருந்து விலக்கி வைப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளைத் தொடங்கியது. ஆனால், எஸ்ஐஆரை எதிர்ப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்க தேச விரோதிகள் முற்படுகின்றனர். இந்தியாவுக்குள் ஊடுருவல்களைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.