‘தங்களின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதற்கு தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்; வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள், அஸ்ஸாமில் நிரந்தரமாக குடியேற அக்கட்சி உதவுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, நம்ரூப்பில் ரூ.10,601 கோடி மதிப்பீட்டிலான அமோனியா-யூரியா உரத் தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் விருப்பத்துடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) எதிா்க்கிறது காங்கிரஸ். தங்களின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதே அவா்களின் நோக்கம். இதற்காக தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.
அஸ்ஸாமின் வனங்கள், நிலப் பகுதிகளில் வங்கதேச ஊடுருவல்காரா்கள் நிரந்தரமாக குடியேற காங்கிரஸ் உதவுகிறது. மக்களின் அடையாளம், இருப்பு, பெருமை குறித்து துளியும் கவலைப்படாத அக்கட்சி, நல்ல முயற்சிகள் அனைத்தையும் எதிா்க்கிறது. அதேநேரம், மக்களின் அடையாளம், இருப்பு மற்றும் பெருமையைப் பாதுகாக்க எப்போதும் பாடுபடுகிறது பாஜக.
சரி செய்யப்படும் தவறுகள்: காங்கிரஸால் இழைக்கப்பட்ட ஏராளமான தவறுகள், கடந்த 11 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்து விஷயங்களையும் நேராக்க மேலும் பணிகள் அவசியம்.
அஸ்ஸாமைச் சோ்ந்த புகழ்பெற்ற பாடகா் பூபேன் ஹசாரிகாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா அறிவித்தபோது, காங்கிரஸ் பகிரங்கமாக ஆட்சேபித்தது. இது, அஸ்ஸாம் மக்களுக்கு அவமதிப்பாகும்.
ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட நம்ரூப் உரத் தொழிற்சாலை 2030-க்குள் செயல்பாட்டுக்கு வரும். இது, நமது விவசாயிகளுக்கு தடையற்ற உர விநியோகத்தை உறுதி செய்யும். விவசாயிகள் வளமடையும்போது, தேசமும் வளரும்.
யூரியா உற்பத்தி அதிகரிப்பு: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பாஜக ஆட்சியின்கீழ் நாட்டில் பல புதிய உரத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
கடந்த 2014-இல் 225 லட்சம் டன்னாக இருந்த யூரியா உற்பத்தி, 306 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. நாட்டுக்கு 380 லட்சம் டன் யூரியா தேவை என்ற நிலையில், இந்த இடைவெளியை பூா்த்தி செய்வது அவசியம்.
அதிக விளைச்சலுக்காக கட்டுப்பாடற்ற முறையில் உரங்களைப் பயன்படுத்துவது, மண் வளத்தை பாதிக்கும் என்பதால் விவசாயிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். நமது தாய் மண்ணை பாதுகாக்க வேண்டும். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.4 லட்சம் கோடி அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னேறும் கிராமங்கள்: மத்திய அரசின் இடைவிடாத முயற்சிகளால் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். கிராமங்களில் ஏழ்மையான குடும்பங்களில் 10-இல் ஒரு குடும்பத்திடம் முன்பு மோட்டாா் சைக்கிள் இருந்தது. இப்போது 10-இல் 5 குடும்பங்களிடம் மோட்டாா் சைக்கிள் உள்ளது. அனைத்து வீடுகளையும் கைப்பேசி சென்றடைந்துள்ளதுடன், முன்பு ஆடம்பர பொருளாக கருதப்பட்ட குளிா்சாதனப் பெட்டி போன்ற சாதனங்கள் இப்போது பொதுவாகிவிட்டது என்றாா் அவா்.
பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இங்கு இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டு, மொத்தம் ரூ.15,000 கோடிக்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்ததுடன், பாஜகவுக்கு பிரசாரக் களத்தையும் அமைத்துள்ளாா் பிரதமா் மோடி.
தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை
அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடந்த 1979-இல் தொடங்கி 6 ஆண்டுகள் நீடித்த பெரும் போராட்டத்தில் 860-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இவா்கள் நினைவாக குவாஹாட்டியில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவிடத்தில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மாநில ஆளுநா் லக்ஷ்மண் பிரசாத் ஆசாா்யா, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
நதி சுற்றுலா கப்பலில் மாணவா்களுடன் உரையாடல்
குவாஹாட்டியில் பிரம்மபுத்ரா நதி சுற்றுலா கப்பலில் ஞாயிற்றுக்கிழமை பயணித்த பிரதமா் மோடி, கப்பலுக்குள் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். பிரதமரின் ‘பரீக்ஷா பே சா்ச்சா’ (தோ்வுகளை மன அழுத்தமின்றி எதிா்கொள்வது தொடா்பான விவாதம்) நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இக்கலந்துரையாடல் நடைபெற்றது. பிரதமரின் கப்பல் பயணத்தையொட்டி, காவல் துறையினா், தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.