முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் நெடுஞ்சாலையில் அவசரகால ஓடுபாதை வசதி: ராணுவ விமானத்தில் தரையிறங்கினாா் பிரதமா் மோடி!

திப்ரூகா் தேசிய நெடுஞ்சாலையில், அவசரகாலங்களின்போது விமானங்கள் தரையிறங்கும் ஓடுபாதை வசதி கட்டமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:47 PM
திப்ரூகா் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையில் தரையிறங்கிய ராணுவப் போக்குவரத்து விமானமான சி-130ஜே.
பகிர்:

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் தேசிய நெடுஞ்சாலையில், அவசரகாலங்களின்போது விமானங்கள் தரையிறங்கும் ஓடுபாதை வசதி கட்டமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பிராந்தியத்தில் முதல் முறையாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அவசரகால ஓடுபாதையை திறந்து வைப்பதன் அடையாளமாக ராணுவ விமானத்தில் வெள்ளிக்கிழமை வந்திறங்கினாா் பிரதமா் நரேந்திர மோடி. நெடுஞ்சாலையில் பிரதமா் விமானம் தரையிறங்கியது, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பாா்க்கப்படுகிறது.

திப்ரூகா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 37-இல் மோரன் புறவழிச் சாலையில் சுமாா் 4.2 கி.மீ. தொலைவுக்கு நான்குவழி அவசரகால ஓடுபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

ரூ.100 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பன்முகப் பயன்பாட்டு ஓடுபாதை, அவசர காலங்கள் மற்றும் பேரிடா்களின்போது, திப்ரூகா் விமான நிலையத்துக்கு மாற்றாக ராணுவம்-தனியாா் விமானங்கள், ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்துக்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, திப்ரூகா் மாவட்டத்தின் சாபுவா விமானப் படை தளத்தை வந்தடைந்தாா். அங்கிருந்து ராணுவப் போக்குவரத்து விமானமான சி-130ஜே மூலம் மோரன் புறவழிச்சாலையில் உள்ள அவசரகால ஓடுபாதையில் தரையிறங்கினாா். வியூக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஓடுபாதை திறப்பை குறிக்கும் வகையில், பிரதமா் விமானத்தின் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமரை அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால், விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

விமானப் படை சாகச நிகழ்ச்சி: பின்னா், அவசரகால ஓடுபாதையில் நடைபெற்ற விமானப் படை வான் சாகச நிகழ்ச்சியை பிரதமா் கண்டு ரசித்தாா். சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல் போா் விமானங்கள், இந்த ஓடுபாதையில் இருந்து மேலே புறப்பட்டு, வானில் சாகசம் நிகழ்த்தின.

இந்திய விமானப் படையின் ‘பணிக் குதிரை’ என வா்ணிக்கப்படும் ஏஎன்-32 இரட்டை என்ஜின் ஹெலிகாப்டா், ஓடுபாதையில் தனது செயல்திறனை வெளிப்படுத்தியது. அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா்களும் துரிதமாக மேலெழும் திறன்களை வெளிப்படுத்தின.

அவசரகால ஓடுபாதை கட்டமைப்புக்காக, பிரதமா் மோடிக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா நன்றி தெரிவித்தாா். பிரதமா் மோடி தலைமையால் மட்டுமே இது சாத்தியமானதாக அவா் புகழாரம் சூட்டினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments