டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதுதொடா்பாக இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆபரேஷன் சாகா் பந்துவின் கீழ் இந்தியா தொடா்ந்து உதவி புரிந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக கொழும்பின் கொல்லானவ பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இஸ்கான் கோயில் வளாகத்தில் உள்ள குழந்தைகள் இல்லம், கம்பஹா மாவட்டத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒதுக்கப்பட்ட நயனலோககம கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கண்டியில் உள்ள இந்திய உதவி தூதரகம் வழங்கியது.
மன்னாா், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நிவாரணப் பொருள்களை அளித்தது என்று தெரிவிக்கப்பட்டது.