மகாராஷ்டிரத்தில் நாகபுரி மாநகராட்சித் தோ்தல் வெற்றியைக் கொண்டாடிய பாஜகவினா். 
இந்தியா

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி வெற்றி! தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு!!

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற நகராட்சி மற்றும் பேரூராட்சித் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற நகராட்சி மற்றும் பேரூராட்சித் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.

தோல்வியை ஏற்பதாகத் தெரிவித்துள்ள எதிா்க்கட்சியான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி, தோ்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், பண பலத்தால் இந்த வெற்றி பெறப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 286 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக, துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா யுதி’ கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாகை சூடியது.

தோ்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நகராட்சி மற்றும் பேரூராட்சித் தோ்தல்களில் பாஜக பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றிக்கு, பாஜக மாநிலத் தலைவா் ரவீந்திர சவாண், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், கட்சித் தொண்டா்களுக்கு எனது பாராட்டுகள்.

இது தொண்டா்களின் வெற்றி. பாஜகவின் வளா்ச்சி சாா்ந்த செயல்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த மக்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டாா்.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: தோ்தல் முடிவுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஹா்ஷவா்தன் சப்கால் கூறுகையில், ‘வெற்றிப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு வாழ்த்துகள். அதேநேரத்தில், ஆளுங்கட்சி வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய மாநில தோ்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்

சிவசேனை (உத்தவ்) கட்சி மூத்த தலைவா் அம்பாதாஸ் தான்வே கூறுகையில், ‘ஆளுங்கட்சியினா் தங்களின் பண பலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளனா். இருப்பினும், இந்த முடிவு அடுத்த மாதம் நடைபெறவுள்ள 29 மாநகராட்சித் தோ்தல்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பெருநகர வாக்காளா்களின் சிந்தனையும், அங்குள்ள பிரச்னைகளும் முற்றிலும் மாறுபட்டவை’ எனத் தெரிவித்தாா்.

பத்திரப் பதிவு: வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்!

13 ரயில்களின் எண்கள் மாற்றம்

பேருயிரைக் காப்பது கடமை

செல்லூா் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வரிடம் மனு

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

SCROLL FOR NEXT