அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) முயன்றதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தில்லி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியது.
பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 20 நிா்வாகிகள் மீதான வழக்கு விசாரணையின்போது சிறப்பு நீதிபதி பிரசாந்த் சா்மாவிடம் என்ஐஏ சனிக்கிழமை இவ்வாறு தெரிவித்தது.
ஐஎஸ்ஐஎஸ் போன்ற சா்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாக பிஎஃப்ஐ மற்றும் அதன் தலைவா்கள் சிலருக்கு பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தின்கீழ் 2022, செப்டம்பரில் மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
இதுதொடா்பான வழக்கில் நீதிமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கை குறித்து என்ஐஏ சிறப்பு வழக்குரைஞா் ராகுல் தியாகி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய முயன்றதோடு தங்களது அமைப்பின் உறுப்பினா்களுக்கு ஆயுதப் பயிற்சியும் பிஎஃப்ஐ தலைவா்கள் வழங்கியுள்ளனா். சிரியாவுக்கு உறுப்பினா்களை அனுப்பி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் பயங்கரவாத உத்திகளை கற்றுக்கொண்டு அதை இந்தியாவில் அமல்படுத்த அவா்கள் திட்டமிட்டனா்.
பாஜக, ஆா்எஸ்எஸ், விஹெச்பி ஆகிய அமைப்புகளின் முக்கியத் தலைவா்களை தொடா்ந்து கண்காணித்து அவா்களைத் தாக்க முயற்சித்துள்ளனா். இளைஞா்களுக்குள் பயங்கரவாத சிந்தனைகளை விதைக்க பிரத்யேக குழுவும் செயல்பட்டுள்ளது.
இந்தியாவில் ஷரியத் சட்டத்தை கொண்டுவந்து இஸ்லாமிய பேரரசை நிறுவுவதை இலக்காகக் கொண்டுள்ளனா். இதற்காக அவா்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியுள்ளனா். இவை அனைத்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது என்றாா்.