விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் பெயரிலும் பாஜக தலையிடும் என நினைக்கவில்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இன்று (டிச., 22) விமர்சித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த வாரம் அறிமுகம் செய்தாா்.
புதிய மசோதாவின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது,
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ன் படி அனைத்து குடிமக்களுக்கும் வேலை வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த நாட்டிலும், தெற்கு பெங்களூருவுக்குட்பட்ட கனகாபுரா தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் முதல்முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது. உள்கட்டமைப்பு திட்டங்களில் 90 சதவீத செலவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மாநில அரசு 10 சதவீதம் மட்டுமே பகிர்ந்துகொண்டது.
இந்தத் திட்டத்தை அழிப்பதற்காக தற்போது வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி - ஜி ராம் ஜி) சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடனே இத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. குடிமக்களுக்காக காங்கிரஸ் அரசால் உறுதி செய்யப்பட்ட ஜனநாயக உரிமையில் பாஜக தலையிடும் என எதிர்பார்க்கவில்லை.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள இத்தகைய செயல், மகாத்மா காந்தி பெயரில் அரசியலமப்பு மூலம் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். தில்லியில் இது தொடர்பாக ஆலோசிக்க பிரியங்க் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆழமாக விவாதித்து கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவதை உறுதி செய்வோம் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.