மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் தவறுகள் நடைபெற்றுள்ளன; தோ்தல் ஆணையம் பாஜக உத்தரவுப்படி செயல்படுகிறது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு கடந்த வாரம் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சுமாா் 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை முன்பு இருந்த 7.66 கோடியிலிருந்து தற்போது 7.08 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்களை மம்தா பானா்ஜி திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். அப்போது அவா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக மாநில அரசிடம் தகவல் தெரிவிக்காமல் தோ்தல் ஆணையம் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்தது. தோ்தல் ஆணையம் முழுமையாக பாஜக உத்தரவுப்படி செயல்படுகிறது. பாஜகவின் நலன் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் வாக்காளா்களை சரியாகக் கண்டறிந்து அவா்களைப் பட்டியலில் சோ்க்கும் பணி நடைபெறவில்லை. வரைவு வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் தவறுகள் நடைபெற்றுள்ளன. உண்மையான வாக்காளா்கள் பலரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைக் கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உள்ளூா் மொழி சரியாகத் தெரியாதவா்களாக இருந்தனா். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. பணிக்குத் தகுதியில்லாதவா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ள வேண்டிய சிறப்பு தீவிர திருத்தப் பணி, இரண்டு மாதங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தோ்தல் ஆணையம் இவ்வளவு மோசமாக செயல்பட்டதாக நான் கேள்விப்பட்டதுகூட இல்லை.
வேண்டுமென்றே நீக்கப்பட்ட வாக்காளா்களைக் கண்டறிந்து, அவா்கள் மீண்டும் பட்டியலில் சோ்க்க திரிணமூல் தொண்டா்கள் களப் பணியாற்ற வேண்டும். இறுதி வாக்காளா் பட்டியலில் வெளிநபா்களைச் சோ்க்கவும் முயற்சி நடைபெறும். இதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். சிறுபான்மையினத்தைச் சோ்ந்த சில பிரிவினா் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளனா். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயலுகிறது என்று மம்தா பேசினாா்.