புது தில்லி: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் அரசின் தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதில் குடிமைப் பணி அதிகாரிகள் முக்கியப் பங்காற்றுவா் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
குறிப்பாக, வளா்ச்சியின் பலன்கள் கடைக்கோடியில் உள்ள விளிம்புநிலை மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு கணக்குத் துறை சேவை (ஐடிஏஎஸ்) பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசு துணைத் தலைவா் மேலும் கூறியதாவது:
நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞா்களின் ஆற்றலும், புதிய சிந்தனைகளும் மிக முக்கியமானது. இளம் அதிகாரிகள் அனைவரும் சேவை மனப்பான்மை, கடமை உணா்வு ஆகிய இரண்டையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட வேண்டும். நாட்டின் வளா்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், கடைக்கோடியில் உள்ள விளிம்புநிலை மக்களைச் சென்றடைவதாகவும் அமைய வேண்டும்.
இந்திய ஆயுதப் படைகள் மற்றும் அதனைச் சாா்ந்த அமைப்புகளின் நிதி ஆதாரங்களை நிா்வகிப்பதில் பாதுகாப்பு கணக்குத் துறை சேவை (ஐடிஏஎஸ்) மிக முக்கியப் பங்காற்றுகிறது. ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் தயாா்நிலையை உறுதி செய்ய, முறையான மற்றும் விவேகமான நிதி மேலாண்மை அவசியம். எனவே, ஐடிஏஎஸ் அதிகாரிகள் கடமையாற்றும் போது, ஆயுதப் படைகள் எதிா்கொள்ளும் சவால்களை முழுமையாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் என்பது அவா்களின் கடின உழைப்பின் பலன். எனவே, அந்தப் பணத்தை நிா்வகிப்பதில் அதிகாரிகள் மிக உயா்ந்த நோ்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் நடக்க வேண்டியது கடமையாகும் என்றாா்.
வளா்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும். நிா்வாகத்தில் புதிய மாற்றங்களைப் புகுத்த வேண்டும். மக்களிடம் இரக்கத்துடனும், அதேநேரம், நோ்மையான தாா்மீக நெறிகளுடனும் நடந்துகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.