முதல்வர் பதவி தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மாற்றம் குறித்த குழப்பம் உள்ளூர் அளவில்தான் உள்ளது. இந்தப் பிரச்னை கட்சி மேலிடம்வரை வரவில்லை. உள்கட்சி பூசல் தொடர்பான பிரச்னைக்கு உள்ளூர் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, அதற்காக கட்சி மேலிடத்தை குறைசொல்லக் கூடாது, கட்சியைவிட பெரியவர்கள் யாரும் கிடையாது. தனி நபரால் கட்சி ஆட்சிக்கு வரவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து மைசூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதாவது: மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முதல்வர் பதவி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சுட்சி மேலிடத் தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
கட்சி மேலிடத் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். இதுகுறித்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் பேசியிருக்கிறேன். எனவே,கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்று நடப்பேன்.
5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக இருப்பேனா என்பது வேறு விஷயம். கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதுதான் இறுதி முடிவு. முதல்வர் மாற்றம் தொடர்பான விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.
அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்று விளக்கம் அளித்த பிறகு, இந்தப் பிரச்னை குறித்து ஊடகங்கள் பேசிவருகின்றன.
இதுதொடர்பாக என்ன சொல்ல வேண்டுமோ, அதுகுறித்து சட்டப்பேரவையில் கூறிவிட்டேன். அதன் பிறகும் முதல்வர் மாற்றம் பற்றிப் பேசுவது சரியல்ல.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கர்நாடகத்தில் அரசியல் புரட்சி வெடிக்குமா என்று கேட்கிறீர்கள். எதுவாக இருந்தாலும், கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.
கட்சியைவிட தனிநபர் முக்கியமல்ல என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியதை எல்லோரும் ஏற்க வேண்டும்.
கட்சியைவிட வேறு யாரும் பெரிதாக இருக்க முடியாது. முன்னாள் அமைச்சர் கே.என். ராஜண்ணா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்ததில் என்ன தவறு? எஸ்.எம். கிருஷ்ணா ஆட்சிக் காலத் தில் கே.என்.ராஜண்ணாவை அபெக்ஸ் வங்கியின் தலைவராக நியமித்ததாக டி.கே.சிவகுமார் கூறியிருக்கிறார்.
ஒருவரை பதவிக்கு கொண்டு வந்ததை பெருமையாகக் கூற முடியாது.
எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சியில், கே.என்.ராஜண்ணா தலைவராக நியமிக்கப்பட்டார்; அவ்வளவுதான் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.