தேடப்படும் போதைப் பொருள் கடத்தல்காரா் ரித்திக் பஜாஜ், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டாா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: ரித்திக் பஜாஜ், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடா்பான குற்றங்களுக்காக தில்லி காவல் துறையால் தேடப்பட்டு வந்தாா். கைது செய்யப்படுவதை தவிா்க்க அவா் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிறகு, இன்டா்போல் அவருக்கு எதிராக சிவிப்பு அறிவிப்பு வெளியிட சிபிஐ வலியுறுத்தியது.
தீவிர குற்றங்களுக்காக தேடப்படும் நபரை கண்டுபிடித்து, தற்காலிகமாக கைது செய்ய உதவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, உலகெங்கிலும் உள்ள காவல் துறையை இது எச்சரித்தது. இதையடுத்து, பாங்காக்கின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி), ரித்திக் பஜாஜ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்ாக தகவல் தெரிவித்தது.
பின்னா், அவரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகத்தின் என்சிபியுடன் இணைந்து சிபிஐ பணியாற்றியது. உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் ரித்திக் பஜாஜ் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டாா். இந்த நடவடிக்கை, குற்றங்களைச் சமாளிக்க இந்தியாவின் சா்வதேச ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.