வங்கதேச அரசுக்கு எதிராக, ஜம்மு - காஷ்மீரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர்.
வங்கதேசத்தில், கடந்த டிச.18 ஆம் தேதி திபு சந்திர தாஸ் எனும் 25 வயது இளைஞரை, போராட்டக்காரர்கள் அடித்துக் கொலை செய்தனர். இதனைக் கண்டித்து, வங்கதேச தூதரகத்தின் வாசலில் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில், வங்கதேச அரசுக்கு எதிராகவும், அங்குள்ள ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இன்று (டிச. 23) போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில், ஜம்முவில் உள்ள வங்கதேச மற்றும் ரோஹிங்கியா அகதிகள் வெளியேற்றப்பட வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
“வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
இதற்கு இரண்டே தீர்வுகள்தான் உள்ளன, ஒன்று அங்குள்ள ஹிந்து மக்களை இந்தியாவுக்கு அழைத்து வாருங்கள் அல்லது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” எனக் கூறியுள்ளனர்.
இதேபோல், ரஜௌரி மாவட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக விஹெச்பி, பஜ்ரங் தல் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. இந்தப் போராட்டத்தில், வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸின் உருவப் பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரியங்காவை பிரதமராக்குங்கள்! காங்கிரஸுக்குள் எழுந்த முதல் குரல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.