ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அமெரிக்காவின் ‘ப்ளூபேர்ட்-6’ செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட் புதன்கிழமை காலை விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள், எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை விண்ணில் செலுத்துவதற்காக 24 மணி நேரங்கள் முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை 8.54 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்தன.
ராக்கெட் ஏவப்படுவதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
செயற்கைக்கோளின் பயன்பாடுகள்
தகவல் தொடா்புக்கான புளூபேர்ட் செயற்கைக்கோள் சுமார் 6,100 கிலோ எடை கொண்டது. இது 223 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட அமைப்பை கொண்டது.
விண்வெளியிலிருந்து நேரடியாக சாதாரண ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதை இந்த செயற்கைக்கோள் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், விடியோ அழைப்புகள், குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.
இதில், குறிப்பிடத்தக்க அம்சமாக இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற பெருமையையும் பெற்றுள்ளது எல்விஎம்-3 எம்6 ராக்கெட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.