உத்தவ் - ராஜ் தாக்கரே கூட்டணி: மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை(யுபிடி) மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையும் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சிவசேனையில் இருந்து விலகிய நிலையில், தற்போது கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 15 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் இணைந்து கூட்டணி அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் செய்தியாளர்களை இருவரும் கூட்டாகச் சந்தித்து, கூட்டணி அமைப்பதாக அறிவித்தனர். பின்னர், இரு குடும்பத்தினரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கடந்த ஜூலை மாதம் இருவரும் ஒன்றாக இணைந்து ஹிந்து திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் மிகப்பெரிய பேரணியை நடத்தினர்.
தாக்கரே சகோதரர்கள்
சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. பால் தாக்கரேவின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்தான் ராஜ் தாக்கரே.
ராஜ் தாக்கரே சிவசேனை கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையை தொடங்கினார். ‘மண்ணின் மைந்தன்’ என்ற முழக்கத்துடன் மிக கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டாா்.
கடந்த 2009-இல் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 13 தொகுதிகளில் எம்என்எஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற மற்ற தோ்தல்களில் அவரது கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.