திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக மாநில செயலர் வி.வி. ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
45 ஆண்டுகளாக தொடர்ந்து இடதுசாரிகளின் வசமிருந்த தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி அசத்தியது.
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொள்ள தயாராகி வரும் பாஜகவுக்கு மிகப் பெரிய உந்துதலையும் இந்தத் தேர்தல் அளித்தது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 101 வார்டுகளில், பாஜக கூட்டணி 50, இடதுசாரி கூட்டணி 29, காங்கிரஸ் கூட்டணி 19, சுயேச்சைகள் 2 வார்டுகளில் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை வேட்பாளர் உள்ளிட்டோரின் பெயர்களையும் பாஜக அறிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் முன்னாள் டிஜிபியும், கேரளத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான ஆர். ஸ்ரீலேகாவுக்கு ஆதரவளித்து வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட்ட கட்சியின் மற்றொரு பிரிவினரின் வலுவான ஆதரவால் மாநில செயலரான வி.வி. ராஜேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலேகாவைவிட வி.வி. ராஜேஷுக்கு அதிக அனுபவம் இருப்பதால், அவருக்கு மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் அவரின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஸ்ரீலேகாவுக்கு வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் பாஜக அதிகம் வெற்றிபெற்ற வாய்ப்பிருக்கக்கூடிய தொகுதியில் போட்டியிட்ட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேநேரத்தில் இளம் பெண் தலைவரும், மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற கவுன்சிலராகத் தேர்வாகியுள்ள ஆஷா நாத்தின் பெயர் துணை மேயராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல்கள் நாளை(டிச. 26) நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.