ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உள்பட மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சண்டை புதன்கிழமை இரவு பெல்கர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கும்மா காட்டில் நடைபெற்றது. கொல்லப்பட்ட இரண்டு நக்சலைட்டுகளில் ஒருவர் சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் குழு உறுப்பினர் பாரி என்ற ராகேஷ் என்றும், மற்றொருவர் தள உறுப்பினர் அம்ரித் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இவர்கள் இருவர் மீதும் மொத்தம் ரூ. 23.65 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
மற்றொரு பெண் மாவோயிஸ்ட்டின் உடல் வியாழக்கிழமை காலை மோதல் நடந்த இடத்திற்கு அருகில் மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒடிசா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, மாவோயிஸ்டுகளை எதிர்கொண்டது.
மாவோஸ்டுகளிடமிருந்து, ஒரு கைத்துப்பாக்கி, 303 துப்பாக்கி மற்றும் வாக்கி-டாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.
பாதுகாப்புப் படையினர் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாவட்டமான மல்கானகிரியில் 22 மாவோயிஸ்டுகள் ஒடிசா டிஜிபி ஒய்.பி. குரானியாவிடம் சரணடைந்த ஒரு நாளில் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.