திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எவ்வாறு சமாளித்தார் என்ற சுவாரசியமான தகவலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், பாஜக தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயி-யின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நகைச்சுவை உணர்வு மற்றும் பல்வேறு நினைவலைகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்துகொண்டுள்ளார்.
வாஜ்பாயி பற்றிய கவிதை நிகழ்வு புது தில்லியில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாயி பற்றிய பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் பேருந்து மூலம் பாகிஸ்தானின் லாகூருக்குச் சென்றிருந்தார். அங்குதான் லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதச் சோதனைகள் நடந்து பதற்றம் உருவாகியிருந்தபோது, அதனைத் தணிக்கும் வகையில், லாகூர் ஒப்பந்தத்தில் இருநாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
அப்போது, வாஜ்பாயுடன், ராஜ்நாத் உள்ளிட்ட பல தலைவர்கள் உடன் சென்றிருந்தனர். நிகழ்ச்சியின்போது, வாஜ்பாயி உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர், கூட்டத்திலிருந்து வாஜ்பாயிக்கு திருமண அழைப்பை விடுத்தார். நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன், திருமண பரிசாக, பாகிஸ்தானுக்கு காஷ்மீரை கொடுக்க முடியுமா என்று கேட்டார்.
வாஜ்பாயி பேச்சு சாதுர்யம் கொண்டவர். அவர் சிரித்தபடியே தன்னுடைய நகைச்சுவை உணர்வோடு பதிலளித்தார், அந்தப் பெண்ணைப் பார்த்து உங்களை நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு நீங்கள் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் எனக்கு வரதட்சிணையாகக் கொடுக்க வேண்டும் என்று சாமர்த்தியமாகக் கூறினார். இதனைக் கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஒரு பெண் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கும்போது, அவரது மனதும் புண்படாமல், இரு நாட்டு தூதரக உறவும் பாதிக்கப்படாமல், சாதுர்யமாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்து வாஜ்பாய் அந்த நேரத்தில் சிரிப்பலையை உருவாக்கினார் என்றும் ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டார்.
அதுபோல, அவசரநிலை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயிக்கு முதுகுவலி ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முதுகுவலி எப்படி வந்தது, எங்காவது குனிந்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு வாஜ்பாய், என் வாழ்வில் எப்படி குனிய வேண்டும் என்பதை நான் கற்கவேயில்லை. எங்காவது திரும்பியிருப்பேன், அதனால் முதுகுவலி ஏற்பட்டிருக்கிறது என்று நகைச்சுவை உணர்வோடு பதிலளித்திருந்தார் என்பதையும் ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டார்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தன்னுடைய 93வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.