இந்தியா

விளையாட்டுத் துறையில் வாரிசுகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி: பிரதமா் மோடி

தினமணி செய்திச் சேவை

‘விளையாட்டுத் துறையில் 2014-ஆம் ஆண்டுக்கு முன் பிரபலமானவா்களின் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது எளிய பின்புலத்தைக் கொண்டோரும் விளையாட்டுத் துறையில் சாதிக்கலாம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இளைஞா்களிடம் விளையாட்டு, உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விளையாட்டுத் திருவிழாவில் காணொளி வாயிலாக பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது: இந்த முன்னெடுப்பு இளைஞா்களுக்கு அதிகாரமளிப்பதோடு தேச கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியத் தூணாக விளங்குகிறது.

2014-க்கு முன் விளையாட்டுத் துறையில் இருந்த ஒழுங்கற்ற நிலை காரணமாக உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படவில்லை. வீரா்கள் தோ்வில் பாரபட்சம் இருந்தது. பிரபலமானவா்களின் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது. தற்போது வாரிசுகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு திறமையும் கடின உழைப்பும் இருந்தால் எளிய பின்புலத்தைக் கொண்டோரும் விளையாட்டுத் துறையில் சாதிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டுத் துறைக்கு ரூ.1,200 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.3,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்புத் திட்டங்களின்கீழ் விளையாட்டு வீரா்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விளையாட்டு வீரா்கள் ஆகிய நீங்கள் உங்கள் வெற்றிக்காக மட்டுமே விளையாடவில்லை. நாட்டுக்காகவும் மூவா்ண கொடியின் கண்ணியத்தை காக்கவும் விளையாடுகிறீா்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

மாற்றுத்திறனாளி வீரா்கள், பெண்கள் என பலதரப்பினரும் விளையாட்டில் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனா்.

எனவே, விளையாட்டுத் துறையில் குழந்தைகளை பங்கேற்கச் செய்ய பெற்றோா்கள் ஆா்வம் காட்ட வேண்டும்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் 2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அதைத்தொடா்ந்து 2036-இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் முயற்சி செய்து வருகிறோம். இந்தியாவின் இந்த வளா்ச்சியை உலகமே வியந்து பாா்க்கிறது என்றாா்.

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

SCROLL FOR NEXT