FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,479 கோடி ஒதுக்கீடு!

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,479.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி 2026, 3:11 am IST
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,479.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை சுமார் ரூ.1,133 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025}26 பட்ஜெட்டில் விளையாட்டுத் துறை ரூ.3,346.54 கோடி ஒதுக்கீடு பெற்றிருந்தது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கான இந்த ஒதுக்கீட்டில், "கேலோ இந்தியா' திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.924.35 கோடியாக உள்ளது. கடந்த முறை இதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், செலவினங்கள் ரூ.700 கோடியை மட்டுமே எட்டியதால், இந்த முறை அதற்கான தொகை குறைக்கப்பட்டுள்ளது. அப்படியும், விளையாட்டுத் துறை பட்ஜெட்டில் "கேலோ இந்தியா' திட்டத்துக்கான ஒதுக்கீடே அதிகமாகும்.

Advertisement

Advertisement

அடுத்தபடியாக, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கான (சாய்) தொகை ரூ.917.38 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை இது ரூ.880 கோடியாக இருந்தது. தேசிய அளவிலான முகாம்கள், பயிற்சி, போட்டிகளுக்கான ஏற்பாடுகள், விளையாட்டரங்க பராமரிப்புகள் ஆகிய பணிகளை "சாய்' மேற்கொள்கிறது.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கான (நாடா) ஒதுக்கீடு தொகை ரூ.20.30 கோடியாகவும், தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கான ஒதுக்கீடு ரூ.23 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த பட்ஜெட்டில் அவற்றுக்கான ஒதுக்கீடு முறையே ரூ.24.30 கோடி மற்றும் ரூ.28.55 கோடியாக இருந்தது.

நடப்பாண்டு ஜூலை - ஆகஸ்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிக்குத் தயாராவதற்காக உதவித் தொகை ஒதுக்கீடு ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.28.05 கோடியாக இருந்தது.

தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கான ஒதுக்கீடு ரூ.78.64 கோடியில் இருந்து, ரூ.46.98 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுகள் மேம்பாட்டு நிதிக்கான ஒதுக்கீடு ரூ.3 கோடியில் இருந்து, ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டியாளர்களுக்கான ஊக்கத் தொகைக்கான ஒதுக்கீடு ரூ.28 கோடியில் இருந்து ரூ.40 கோடியாகவும், தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கான உதவித் தொகை ஒதுக்கீடு ரூ.400 கோடியில் இருந்து ரூ.450 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

உபகரண உற்பத்தி துறைக்கு ரூ.500 கோடி

விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட்டில் முதல் முறையாக, விளையாட்டு உபகரண உற்பத்தி துறைக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த, எளிதாக வாங்கக் கூடிய விளையாட்டு உபகரணங்களை உற்பத்தி செய்யும் உலகளாவிய சந்தையாக இந்தியாவை மேம்படுத்துவதற்கான முயற்சியாக இந்த பிரத்யேக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த முன்னெடுப்பின் காரணமாக நாட்டிலுள்ள விளையாட்டு உபகரண உற்பத்திக்கான ஆராய்ச்சி, வடிவமைப்பு, மூலப் பொருள்கள் அறிவியல் ஆகியவை தொடர்பான புத்தாக்க நிறுவனங்கள் யாவும் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments