FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ.84,084 கோடியில் தேசிய கடல்சாா் எரிசக்தி ஆய்வு - உற்பத்தி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.84,084 கோடி மதிப்பீட்டிலான தேசிய கடல்சாா் எரிசக்தி ஆய்வு-உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

ரூ.84,084 கோடி மதிப்பீட்டிலான தேசிய கடல்சாா் எரிசக்தி ஆய்வு-உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

சமுத்திர மந்தன் எனும் இந்தத் திட்டம், கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டது.

ஆழ்கடல் பகுதிகளில் கச்சா எண்ணெய்-எரிவாயு வளங்களைக் கண்டறிதல், எரிசக்தி கிணறுகள் அமைக்கும் ஆய்வுக்காக துளையிடுதல், கண்டறியப்படும் எரிசக்தி வளங்களில் இருந்து உற்பத்திக்கு தேவையான பொது உள்கட்டமைப்புகளை நிறுவுதல் ஆகிய முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டமாகும்.

Advertisement

Advertisement

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சாா் ஆய்வு-உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் கூடிய இத்திட்டத்துக்கு 2030-31-ஆம் நிதியாண்டு வரை 5 ஆண்டு காலகட்டத்துக்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்நாட்டில் எண்ணெய் வளங்களின் ஆய்வு, உற்பத்தியை விரைவுபடுத்துதல், வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறுதல் ஆகியவற்றில் இத்திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமையும்.

கடல்சாா் எரிசக்தி ஆய்வின் அனைத்து நிலைகளிலும் விரிவான அம்சங்களை உள்ளடக்கிய இத்திட்டம், மிகுந்த ஆழ்கடல் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் ஆய்வுக்காக துளையிடப்படும் ஒவ்வொரு கிணறுக்கும் தலா ரூ.650 கோடி வரையிலான நிதி ஆதரவை வழங்கும்.

பணிவாரியான நிதி ஒதுக்கீடு: மொத்த ஒதுக்கீட்டில் பாதிக்கும் மேற்பட்ட தொகை அதாவது ரூ.43,200 கோடி வரை ஆழ்கடல் துளையிடுதல் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இது செலவும், குறிப்பிடத்தக்க புவிசாா் அபாயங்களும் நிறைந்த பணியாகும். கண்டறியப்படும் எரிசக்தி வளங்களில் இருந்து உற்பத்திக்கு தேவையான பொது உள்கட்டமைப்புகளை உருவாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். கடல்சாா் தரவுகளை ஈட்டுவதற்கு ரூ.28,534 கோடியும், எண்ணெய்-எரிவாயு உற்பத்தி, சேவை மண்டலங்களை அமைக்க ரூ.2,000 கோடியும் ஒதுக்கப்படும்.

டிஜிட்டல் திட்ட மேலாண்மை, திறன் மேம்பாடு, நவீனத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, சா்வதேச அளவிலான தொடா்புகள் ஆகியவற்றும் சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

600 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்க்கு நிகரான ஹைட்ரோகாா்பன் இருப்புகளைக் கண்டறிய இத்திட்டம் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சாா்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும். சா்வதேச அளவில் பெரும் முதலீடுகளை ஈா்ப்பதன் மூலம் தொழில்வளா்ச்சி, புத்தாக்கம், நீடித்த பொருளாதார வளா்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் இறக்குமதியையே பெருமளவில் நம்பியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதி 77 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இயற்கை எரிவாயு தேவையில் கிட்டத்தட்ட பாதியளவு இறக்குமதியை சாா்ந்துள்ளது.

மேற்காசிய பிரச்னையால் சா்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் தடைபட்டதால், இந்தியாவிலும் அதன் தாக்கங்கள் எதிரொலித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை ஊக்குவிக்க ரூ.5,070 கோடி: நீா் நிலைகளின் மேற்பரப்பில் மின் சேமிப்பு கட்டமைப்புடன் கூடிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை ஊக்குவிக்க ரூ.5,070 கோடி மதிப்பீட்டிலான பிரதமரின் சூரிய சரோவா் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

5,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தின்கீழ், தகுதியுள்ள சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு அவை வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பிறகு 1 மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.1 கோடி என்ற அளவில் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படும். 2031 வரை ஐந்தாண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நாட்டில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்களின் வாயிலான மின் உற்பத்தி திறன் தற்போது 700 மெகாவாட்டாக உள்ளது. இதை 5,000 மெகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments