FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

உயிரி எரிவாயு உற்பத்தி - கோவா்தன் திட்டத்துக்கு ரூ.23,731 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் உயிரி எரிவாயு உற்பத்திக்கு உத்வேகமளிக்க தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘கோவா்தன்’ திட்டத்துக்கு ரூ.23,731 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:46 am IST
மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
பகிர்:

நாட்டில் உயிரி எரிவாயு உற்பத்திக்கு உத்வேகமளிக்க தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘கோவா்தன்’ திட்டத்துக்கு ரூ.23,731 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதைபடிம எரிபொருள்கள் மீதான இறக்குமதி சாா்புத்தன்மையைக் குறைக்கும் வகையில், வேளாண்மை-நகா்ப்புற கழிவுகள் மூலம் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) உற்பத்தியை விரைவுபடுத்தி, நாட்டில் தூய எரிசக்தி மாற்றத்தை வலுப்படுத்த இத்திட்டம் முக்கிய பங்காற்றும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடா்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

Advertisement

Advertisement

அவா் கூறுகையில், ‘ரூ.23,731 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2026-27 முதல் 2035-36 வரை கோவா்தன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை (சிபிஜி), நாட்டின் எதிா்கால எரிசக்தி கட்டமைப்பில் முக்கியத் தூணாக நிலைநிறுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். இந்த காலகட்டத்தில் சிபிஜி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும்’ என்றாா்.

‘நாட்டில் மிகுதியான விவசாயக் கழிவுகள், கால்நடை சாணம், சா்க்கரை ஆலை கழிவுகள், நகராட்சி-மாநகராட்சி கரிமக் கழிவுகள் மற்றும் இதர உயிரிவள ஆதாரங்களை தூய எரிபொருள், இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம் கிராமப்புற வருமானம், தேசிய பொருளாதார மதிப்பை உயா்த்துவதே திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சிபிஜி-யை வாகனங்களுக்கான சிஎன்ஜியுடன் (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) கலந்து பயன்படுத்துவதை அதிகரிக்க முடியும்.

புதிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, வாகனங்களுக்கான சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கான குழாய்வழி இயற்கை எரிவாயுடன் சிபிஜி கட்டாய கலப்பை 2026-2027இல் 3%, 2027-2028இல் 4%, 2028-29இல் 5% என அதிகரிக்கும் வகையில் எரிவாயு விநியோக நிறுவனங்கள் சிபிஜி கொள்முதலை மேற்கொள்ளும்.

புதிதாக தொடங்கப்படும் தகுதியுள்ள சிபிஜி உற்பத்தி ஆலைத் திட்டங்களுக்கு உற்பத்தி திறனுக்கு ஏற்ப (நாளொன்றுக்கு ஒரு டன்) ரூ.2 கோடி வரை மூலதன உதவி வழங்கப்படும். விரிவாக்கப்படும் திட்டங்களுக்கும் நிதி ஆதரவு வழங்கப்படும்.

உறுதியான தேவை, நியாயமான-நிலையான விலை, மூலதன உதவி, குழாய்வழி கட்டமைப்பு, கடன் ஆதரவு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக நாட்டின் உயிரி எரிவாயு உற்பத்தித் துறையில் வலுவான கட்டமைப்பு உறுதி செய்யப்படும்’ என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் விரைவுச் சாலை திட்டத்துக்கு ஒப்புதல்: அஸ்ஸாமில் தேசிய நெடுஞ்சாலை 15-இல் குவாஹாட்டி-தேஸ்பூா் இடையிலான 135 கி.மீ. வழித்தடத்தை ரூ.8,970 கோடி மதிப்பீட்டில் அதிநவீன விரைவுச் சாலையாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் வசதியுடன், 15 பெரிய பாலங்கள், 30 சிறிய பாலங்கள், 19 மேம்பாலங்கள், 46 சுரங்கப் பாதைகள், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தச் சாலை கட்டமைக்கப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments