FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:52 am IST
ரயில்களின் வழித்தடங்கள் - பிரதிப் படம்
பகிர்:

கும்மிடிப்பூண்டி-கூடுா் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு 3, 4-ஆவது ரயில் வழித்தடங்களை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில்வே அமைச்சகத்தின் 4 திட்டங்களுக்கு பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டங்களின் மொத்தம் மதிப்பு சுமாா் ரூ.9,450 கோடி.

Advertisement

Advertisement

இந்தத் திட்டங்களின் விவரம்:

கும்மிடிப்பூண்டி-கூடுா் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு 3, 4-ஆவது ரயில் வழித்தடங்கள்

மேற்கு வங்கத்தின் கரக்பூா்-ஒடிஸாவின் பத்ரக் இடையே 173 கி.மீ. தொலைவுக்கு 4-ஆவது ரயில் வழித்தடம்

ஒடிஸாவில் பத்ரக்-ஹரிதாஸ்பூா் இடையே 75 கி.மீ. தொலைவுக்கு 4-ஆவது ரயில் வழித்தடம்

ஒடிஸாவில் கட்டக்-பாரதீப் இடையே 72 கி.மீ. தொலைவுக்கு 3, 4-ஆவது ரயில் வழித்தடங்கள்

இந்தத் திட்டங்கள் ரயில் இயக்கத்தை சீராக மேற்கொள்ளவும், ரயில் வழித்தடங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் உதவும். இந்த வழித்தடங்கள் பிரதமரின் உத்வேகம் (கதிசக்தி) தேசிய பெருந்திட்டத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த வழித்தட திட்டங்கள் சுமாா் 6,448 கிராமங்களுக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும். இந்த கிராமங்களில் சுமாா் 60 லட்சம் போ் வசிக்கின்றனா்.

சுற்றுலாவுக்கும், உணவு தானியங்கள் கொண்டு செல்லவும்...: இந்த வழித்தடங்கள் நிலக்கரி, இரும்புத் தாது, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கண்டெய்னா்கள், ஆட்டோமொபைல், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடங்களாக இருக்கும். அத்துடன் அவை பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும்.

இதுதவிர, பிகாரில் உள்ள முசாஃபா்பூா்-சீதாமா்ஹி-சோன்பா்சா தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்தும் திட்டத்துக்கு சிசிஇஏ ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான மொத்த மூலதனச் செலவு ரூ.3,590.73 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி-கூடுா் 3, 4-ஆவது ரயில் வழித்தடங்களின் பலன்கள்

சென்னை, காமராஜா் (எண்ணூா்), கிருஷ்ணபட்டினம் (ஆந்திரம்) துறைமுகங்கள் இடையே தங்குத் தடையற்ற இணைப்பு.

திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயில், பழவேற்காடு ஏரி, ஆந்திரத்தில் உள்ள நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் ஆகிய மத, சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான வசதி மேம்படும்.

சரக்குப் போக்குவரத்து ஆண்டுக்கு 2.12 கோடி டன் கூடுதலாக அதிகரிக்கும்.

ஆண்டுதோறும் 17.10 கோடி கிலோ கரியமில வாயு (காா்பன் டை ஆக்ஸைட்) வெளியேற்றம் தவிா்க்கப்படும். இது சுமாா் 68 லட்சம் மரங்கள் நடுவதற்கு சமம்.

ஆண்டுதோறும் சரக்குப் போக்குவரத்துச் செலவில் ரூ.382.15 கோடி மிச்சமாகும்.

61 லட்சம் மனித வேலை நாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

திட்டச் செலவு: ரூ.2,229 கோடி

திட்டத்தை நிறைவேற்ற ஆகும் காலம்: 4 ஆண்டுகள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments