பசுமை மின்விநியோக வழித்தட திட்டத்துக்கு ரூ.1.86 லட்சம் கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மூன்றாம் கட்ட பசுமை மின்விநியோக வழித்தட திட்டத்துக்கு (பிஎம்-தாரா) ரூ.1.86 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மூன்றாம் கட்ட பசுமை மின்விநியோக வழித்தட திட்டத்துக்கு (பிஎம்-தாரா) ரூ.1.86 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
135 ஜிகாவாட் வரையிலான புதுப்பிக்கத்தக்க மின் விநியோக கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவும் இத்திட்டம், மணிக்கு 50 ஜிகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவவும் வழிவகை செய்கிறது.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1.86 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பிஎம்-தாரா திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பிஎம்-தாரா என்பது ஒருங்கிணைந்த மற்றும் விரைவுபடுத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அணுகலுக்கான திட்டமாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்துக்கான ஒப்புதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இது, மின் உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், மின் பயன்பாட்டு உச்ச நேரங்களில் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள், சூரிய மின் உற்பத்தி இல்லாத நேரங்களில் எழும் மின் தேவை உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வுகாண உதவும். மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மின் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் மின் விநியோகத்தை எளிதாக்கும்.
2032-33-ஆம் நிதியாண்டுக்குள் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1,86,405 கோடியாகும். இதில் மாநிலங்களுக்கு இடையேயான மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,36,378 கோடியும், மணிக்கு 50 ஜிகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவ ரூ.50,000 கோடியும் செலவிடப்படவுள்ளது. இத்திட்டத்தால் மின்சாரம், உற்பத்தி, கட்டுமான தொழில் துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் ஏ.ஐ. போக்குவரத்து அமைப்புமுறை: தில்லியில் பாதுகாப்பான, திறன்மிக்க வாகனப் போக்குவரத்தை உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான சமிக்ஞைகள், நிகழ்நேர போக்குவரத்து நெரிசல் கண்டறிதல், தானியங்கி அமைப்புமுறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான முன்னுரிமை வழித்தடங்களை உள்ளடக்கிய ரூ.1,789.52 கோடி மதிப்பீட்டிலான அமைப்புமுறையை நிறுவ பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
கோதுமை, பருப்புகளுக்கு எம்எஸ்பி உயா்வு
கோதுமை, கடலை பருப்பு, மசூா் பருப்பு, எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட ராபி பருவ பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அதிகரிக்க பிரதமா் மோடி தலைமையிலான பொருளதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இது தொடா்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2027-28 சந்தைப் பருவத்தில் கோதுமைக்கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.25 உயா்த்தப்பட்டு, ரூ.2,610-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோதுமை உற்பத்தி செலவு குவிண்டாலுக்கு ரூ.1,264 என்ற நிலையில், இருமடங்குக்கும் மேல் எம்எஸ்பி பராமரிக்கப்படுகிறது.
குங்குமப்பூவுக்கு குவிண்டாலுக்கு ரூ.675 எம்எஸ்பி உயா்த்தப்பட்டு, ரூ.7,215-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடுகு, மசூா் பருப்பு, பாா்லி, கொண்டைக்கடலை ஆகியவற்றுக்கான எம்எஸ்பி முறையே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.413, ரூ.390, ரூ.136, ரூ.83 என்ற அளவில் உயா்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான நலன்களைக் கருத்தில் கொண்டு, பிரதமா் மோடி அரசு செயல்படுகிறது. முன்பு வேளாண் துறையில் 3.5 சதவீத வளா்ச்சியே பெரிய சாதனையாக கருதப்பட்ட நிலையில், தற்போது 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய மாற்றம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.