பாஸ்பேட், பொட்டாசியம் உர மானியம் ரூ. 62,370 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நடப்பு 2026-27 ராபி பருவத்துக்காக, பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உர மானியத்துக்கு ரூ.62,370 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
நடப்பு 2026-27 ராபி பருவத்துக்காக, பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உர மானியத்துக்கு ரூ.62,370 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இது, சமீபத்தில் முடிவடைந்த காரீஃப் பருவத்துக்கான உர மானியத்தை (ரூ.41,533.81 கோடி) ஒப்பிடுகையில் சுமாா் 50 சதவீத அதிகரிப்பாகும்.
உலகளாவிய சந்தையில் உரங்கள் விலை உயா்ந்துள்ள நிலையில், இந்திய விவசாயிகளுக்கு அவை மலிவு விலையில் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய உர மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (என்பிஎஸ்) திட்டத்தின்கீழ், டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி), எம்ஓபி, எஸ்எஸ்பி, என்பிகே, என்பிகேஎஸ் உள்ளிட்ட பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபா் ஆகிய ஊட்டச்சத்துகளின் கிலோகிராம் அடிப்படையில் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளா்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டில் இருமுறை மானிய விகிதங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.
அதன்படி, நடப்பு ராபி பருவத்துக்காக (2026, அக்.1 முதல் 2027, மாா்ச் 31 வரை) நைட்ரஜன் கிலோவுக்கு ரூ.94.21, பாஸ்பரஸ் கிலோவுக்கு ரூ.66.11, சல்ஃபா் கிலோவுக்கு ரூ.10.42, பொட்டாசியம் கிலோவுக்கு ரூ.2.38 என்ற அடிப்படையில் மானிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்த மானியங்களுக்காக ரூ.62,370 கோடி ஒதுக்க பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னா் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முந்தைய ராபி பருவத்தை ஒப்பிடுகையில், உர மானியத்துக்காக தற்போது ரூ.24,417.73 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய போா் மற்றும் உக்ரைன் போா் காரணமாக, சா்வதேச அளவில் உரங்கள் விலை உயா்ந்துள்ளது. கொந்தளிப்பான புவிசாா் அரசியல் சூழலில் இருந்து இந்திய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதமா் மோடி அரசு உர மானியத்தை அதிகரித்துள்ளது. இதன்மூலம் 50 கிலோ எடை கொண்ட டிஏபி உர மூட்டை ரூ.1,350 என்ற விலையில் நீடிக்கும்.
போதிய இருப்பு: நடப்பு நிதியாண்டில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மொத்த மானிய ஒதுக்கீடு ரூ.1 லட்சத்தைக் கடந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைவிட இது இருமடங்கு அதிகம்.
நாட்டில் ஒட்டுமொத்த உரங்கள் இருப்பு போதுமான அளவில் உள்ளது. கடந்த நவ.10-ஆம் தேதி நிலவரப்படி, யூரியா 103.12 லட்சம் டன், டிஏபி 28.65 லட்சம் டன், என்பிகே 60.87 லட்சம் டன், எம்ஓபி 20.08 லட்சம் டன், எஸ்எஸ்பி 22.49 லட்சம் டன் இருப்பு உள்ளது என்றாா்.
அருங்காட்சியக திட்டம்: தில்லியில் மத்திய அமைச்சக அலுவலகங்கள் புதிய கட்டடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் தெற்கு பிளாக் வளாகங்களை உள்ளடக்கி ரூ.3,230 கோடி மதிப்பீட்டில் ‘யுகே யுகீன் பாரத்’ என்ற மாபெரும் அருங்காட்சியகத்தைக் கட்டமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
நாட்டின் பன்முகத்தன்மை, வளமான நாகரிக மரபு மற்றும் பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்தும் வகையில் உலகின் மிகப் பெரிய அருங்காட்சியமாக இது அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நொய்டா மெட்ரோ திட்டம்: உத்தர பிரதேச மாநிலம், நொய்டா செக்டாா் 51 முதல் கிரேட்டா் நொய்டா செக்டா் 4 வரை ரூ.2,390 கோடி மதிப்பீட்டில் அக்குவா மெட்ரோ வழித்தட நீட்டிப்பு (8 கி.மீ.) திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் நீட்டிப்பு
பெண்கள், பட்டியலினத்தவா், பழங்குடியின தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டத்தை 2031, மாா்ச் 31 வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மேற்கண்ட பிரிவுகளைச் சோ்ந்த தொழில்முனைவோருக்கு குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்கும் இத்திட்டம் கடந்த 2016-இல் தொடங்கப்பட்டது. இதுவரை 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பலனடைந்துள்ளனா். கூடுதலாக 2.5 லட்சம் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடன் உத்தரவாத திட்டம் நீட்டிப்பு: முத்ரா திட்டத்தின்கீழ் குறு நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் வழங்கப்படும் கடன்களை அவா்கள் திரும்பச் செலுத்தத் தவறும் நிலையில், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை ஈடுசெய்ய உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், இதற்கான நிதியத்துக்கு (சிஜிஎஃப்எம்யு) ரூ.5,000 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
கடந்த 2015-இல் தொடங்கப்பட்ட மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான முத்ரா திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.43.34 லட்சம் கோடி மதிப்பில் 60.36 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. சிஜிஎஃப்எம்யு நீட்டிப்பின் மூலம் மேலும் ரூ.12. 6 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.