FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தமிழகம், 8 மாநிலங்களில் ரூ.20,800 கோடி ரயில் திட்டங்கள்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகம் மற்றும் எட்டு மாநிலங்களில் ரூ.20,804 கோடி மதிப்பீட்டில் 8 பன்முக ரயில் வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

10 செப்டம்பர் 2026, 3:43 am IST
பகிர்:

தமிழகம் மற்றும் எட்டு மாநிலங்களில் ரூ.20,804 கோடி மதிப்பீட்டில் 8 பன்முக ரயில் வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம், தில்லியில் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் 3 திட்டங்கள் உள்பட மொத்தம் ரூ.20,804 கோடி மதிப்பீட்டில் 8 பன்முக ரயில் வழித்தட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தென்மாநிலங்களில்...: இதில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் ரூ.10,021 கோடி மதிப்பீட்டில் 5 பன்முக ரயில் வழித்தட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தின் அரக்கோணம் மற்றும் ஆந்திரத்தின் ரேணிகுண்டா இடையே 77 கி.மீ. தொலைவுக்கு 3, 4-ஆவது ரயில் வழித்தடம் அமைத்தல், ஓசூா் மற்றும் ஓமலூா் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழித்தடம் அமைத்தல், சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையே 159 கி மீ தொலைவுக்கு இரட்டை வழித்தடம் அமைத்தல் ஆகிய திட்டங்கள் அடங்கும்.

மேலும், கா்நாடக தலைநகா் பெங்களூரின் ஒயிட்பீல்டு மற்றும் பங்காரப்பேட்டை இடையே 47 கி.மீ. தொலைவுக்கு 3, 4-ஆவது ரயில் வழித்தடம், தெலங்கானாவின் செகந்திராபாத் மற்றும் காசிபேட் இடையே 110 கி.மீ. பன்முக ரயில் வழித்தடங்கள் அமைக்கும் திட்டங்களும் அடங்கும். மேற்கண்ட 4 மாநிலங்களில் 17 மாவட்டங்களை உள்ளடக்கி, இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. புதிய ரயில் வழித்தடங்களின் மூலம் ரயில்வே துறையின் செயல்பாட்டுத் திறன், சேவை மீதான பயணிகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலனடையும் சுற்றுலா தலங்கள்: தென்மாநிலங்களில் புதிய ரயில் வழித்தட திட்டங்கள் மூலம் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி, ஓசூா் கோட்டை, மேட்டூா் அணை, கொடைக்கானல் மலைப்பகுதி, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதீஸ்வரா் கோயில், யாதகிரிகட்டா கோயில், போங்கீா் கோட்டை, சுரேந்திரபுரி, சுவா்ணகிரி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், கோலாா் கோடிலிங்கேஸ்வரா் கோயில், கோலாா் தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான ரயில் போக்குவரத்து மேம்படும்.

மேலும், ரயில்வேத் துறையின் தற்போதைய கட்டமைப்பை 540 கி.மீ. அளவுக்கு விரிவுபடுத்த உதவும். சுமாா் 52 லட்சம் மக்கள் வசிக்கும் 2,121 கிராமப் பகுதிகளுக்கான போக்குவரத்து இணைப்பு வசதியை மேம்படுத்தும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாக ரயில்வே இருப்பதால், இது நாட்டின் பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், சரக்குகளை திறம்பட கையாள்வதற்கும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவும்.

மேலும் 5 மாநிலங்களில்...: மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய ஐந்து மாநிலங்களில் ரூ.10,783 கோடி மதிப்பீட்டில் 3 பன்முக ரயில் வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

மேற்கு வங்கத்தின் கரக்பூா்-ஒடிஸாவின் ஜாா்சுகுடா இடையே 4-ஆவது வழித்தடம், மத்திய பிரதேசத்தின் கத்னி, சத்தீஸ்கரின் பெந்த்ரா சாலை இடையே 4-ஆவது வழித்தடம், சத்தீஸ்கரின் பிலாஸ்பூா்- பெந்த்ரா சாலை இடையே 3-ஆவது வழித்தடம் ஆகிய 3 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின் மூலம் ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பில் 656 கி.மீ. அதிகரிக்கும்; 14 மாவட்டங்களில் 56 லட்சம் மக்களை உள்ளடக்கிய 4,790 கிராமப் பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து மேம்படும். மேலும் தாராதாரிணி கோயில், பாண்டவ்நகா் புலிகள் காப்பகம், விராடேஸ்வா் கோயில், அமா்கண்டக் கோயில், ஜிவாலேஸ்வா் கோயில், ரத்தன்பூா் மகாமாயா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பலனடையும். 2029-30க்குள் இந்த 8 திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு வசதி வலுப்படும்: பிரதமா் மோடி

மத்திய அமைச்சரவையின் முடிவு தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரூ.20,800 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பீட்டில் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 8 பன்முக ரயில் வழித்தட திட்டங்களும் இணைப்பு வசதியை வலுப்படுத்துவதுடன், விரைவான பயணிகள் போக்குவரத்தை உறுதி செய்து, சரக்கு போக்குவரத்துக்கான செலவையும் குறைக்கும். பாரம்பரிய, வனப் பகுதி சுற்றுலா மேம்பாட்டுக்கு உதவும். லட்சக்கணக்கான மக்கள் பலனடைவா்’ என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments