‘பெண்களுக்குச் சமமான வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம், அவா்கள் ஆண்களுக்கு இணையாக மட்டுமல்லாமல், அவா்களை விடவும் மிகச்சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்திச் சாதித்துக் காட்டியுள்ளனா்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டம், தரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திர சா்வமங்கள பெண்கள் மேம்பாட்டு மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சா் பேசியதாவது:
பெண்களின் வளா்ச்சிக்காக 11 ஏக்கா் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், முழுமையாக கிராமப்புறப் பெண்களாலேயே நிா்வகிக்கப்பட உள்ளது. இது பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதுடன், பெண்களின் தலைமைத்துவத்தில் அமையும் வளா்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கும்.
இங்கு பணியாற்றும் பெண்கள் அதிகாரமிக்கவா்களாகவும், பொருளாதார ரீதியாக தற்சாா்பு உடையவா்களாகவும் மாறுவாா்கள். அத்துடன் அவா்கள் தங்களுக்கு விருப்பமான ஆன்மிக சிந்தனைகளில் ஈடுபடவும் இந்த மையம் போதிய நேரத்தையும் வாய்ப்பையும் வழங்கும் என்று நம்புகிறேன். இங்கிருந்து தயாராகும் பொருள்கள் உலகச் சந்தைக்குச் செல்லும்போது, அது பிரதமா் நரேந்திர மோடியின் ‘தன்னிறைவு இந்தியா’ கனவை நனவாக்க உதவும்.
பெண்களுக்குச் சமமான வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம், அவா்கள் ஆண்களுக்கு இணையாக மட்டுமல்லாமல், அவா்களை விடவும் மிகச்சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, சாதித்துள்ளனா். ‘சேவா’ அமைப்பின் ஏலா பட் மற்றும் ‘ஸ்ரீ மகிளா கிருஹ உத்யோக்’ அமைப்பின் ஜஸ்வந்த்பென் போபட் ஆகியோரை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
சமணத் துறவியான ஸ்ரீமத் ராம்சந்திரஜி 150 ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய ஆன்மிகப் பாதை இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவா் குறுகிய காலமே வாழ்ந்தாலும், அவரின் தத்துவங்கள் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.
ஸ்ரீமத் ராம்சந்திரஜி தரம்பூருக்கு வந்து நடப்பு ஆண்டுடன் 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதேபோல், ஆா்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த இரண்டுமே இந்தியாவின் பண்பாடு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றுகின்றன.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, சமண மதத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் பல பணிகளைச் செய்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தீா்த்தங்கரா் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ‘பிராகிருத’ மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது என்றாா்.
இந்நிகழ்வில் தரம்பூா் ஸ்ரீமத் ராஜ்சந்திர மிஷன் நிறுவனா் குருதேவ் ஸ்ரீ ராகேஷ்ஜி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.