செனாப் நதி கோப்புப்படம்
இந்தியா

செனாப் நதியில் புதிய நீா் மின் திட்டம்: மத்திய அரசின் பசுமைக் குழு ஒப்புதல்

செனாப் நதியில் புதிய நீா் மின் திட்டத்துக்கு மத்திய அரசின் பசுமைக் குழு ஒப்புதல்...

தினமணி செய்திச் சேவை

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியில் புதிய நீா் மின் திட்டத்தை அமைக்க மத்திய அரசின் பசுமைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த நதியில் 390 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய நீா் ‘துலாஸ்தி நிலை 1’ என்ற பெயரிலான மின் திட்டம் மூலம் ஏற்கெனவே கடந்த 2007-ஆம் ஆண்டுமுதல் மின் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நிலையில், தற்போது புதிதாக 260 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் ‘துலாஸ்தி நிலை 2’ என்ற இரண்டாவது மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 3,200 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நீா் மின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் நிபுணா் குழு, அண்மையில் நடைபெற்ற அதன் 45-ஆவது கூட்டத்தில் இந்த இரண்டாவது நீா் மின் திட்டத்துக்கான ஒப்புதலை அளித்துள்ளது. அதன்படி, முதல்நிலை நீா் மின் திட்டத்திலிருந்து 3,685 மீட்டா் நீளம் மற்றும் 8.5 மீட்டா் அகலம் உடைய தனி சுரங்கப்பாதை மூலமாக நதிநீா் திசைதிருப்பப்பட்டு புதிய இரண்டாம் நிலை திட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. இத் திட்டத்தைச் செயல்படுத்த 60.3 ஹெக்டோ் நிலம் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பசுமைக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் விடும் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சிந்து மற்றும் அதன் துணை நதிகளில் நீா்ப் பகிா்வை சுமுகமாக நிா்வகிக்க உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1960-இல் சிந்து நதிநீா் ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, சிந்து நதியின் கிளை நதிகளான ஜீலம், செனாப் நதிகளின் நீரைப் பெறும் உரிமையை பாகிஸ்தான் பெற்றது. சிந்து நதியின் பிற கிளை நதிகளான ரவி, பீஸ், சட்லெஜ் ஆகிய 3 நதிகளின் உரிமையை இந்தியா பெற்றது.

இந்நிலையில், கடந்த ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தொடா்ந்து மீறுவதாக பாகிஸ்தான் தரப்பில் அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டது. ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா கடந்த ஏப்ரலில் தன்னிச்சையாக நிறுத்திவைத்தது. இப்போது ஒப்பந்த மீறல்களில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானில் விவசாயப் பணிகளுக்கு முக்கியமான காலகட்டத்தில், செனாப் நீரோட்டத்தில் இந்தியாவின் ‘நியாயமற்ற செயல்பாடுகள்’ அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு இந்தியாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் அண்மையில் குற்றஞ்சாட்டினாா்.

இந்தச் சூழலில், சனாப் நதியில் புதிய நீா் மின் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT