பிகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழும் கதை பழையதாகி, தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரோப் கார், சோதனை ஓட்டத்தின்போதே இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பிகார் மாநிலம் ரோஹ்தஸ் மாவட்டத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரோப் கார் வசதி, வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போதே வெறும் ரோப் கார்கள் ஓட்டி சோதிக்கப்பட்டபோது, ரோப்களை தாங்கும் தூண்கள் இடிந்து விழுந்ததில், கார்கள் கீழே விழுந்தன. நல்வாய்ப்பாக யாருக்கு காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பிகார் மக்களோ, நல்வாய்ப்பாக ரோப் கார்கள், சோதனை ஓட்டத்தின்போதே இடிந்துவிழுந்துவிட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
ரோஹ்தஸ்கர் கோட்டையிலிருந்து ரோஹிதேஸ்வர் தாம் இடையே ரோப் கார் சேவை அமைக்கப்பட்டு வந்தது. ஆங்காங்கே தூண்கள் நிறுவப்பட்டு முதற்கட்டமாக 4 கார்கள் ஏற்றப்பட்டு சோதிக்கப்பட்டது.
ஆனால், திடீரென ஒரு தூண் சரிந்து, அனைத்து ரோப் கார்களும் கீழே விழுந்தன. அப்பகுதியில் நின்றிருந்த ஊழியர்கள் தப்பியோடியதால் உயிர் பிழைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து அதிகாரிகள் பேசுகையில், ஓரிடத்தில் கயிறு சிக்கியதால் விபத்து நேரிட்டதாகவும், படிப்படியாக எடை அதிகரிக்கப்பட்டு சோதனை செய்தபோது இந்த விபத்து நேரிட்டதாகவும், இப்போதுதான் பணிகள் நடந்து வருகின்றன. இன்னமும் முழுமையடையவில்லை. பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் திருப்தி அளித்த பிறகுதான் மக்களுக்காக திறக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
இந்த தகவல் அறிந்த மக்கள், 1,300 மீட்டர் ரோப் கார் சேவைக்காக ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இது விபத்து அல்ல, ஊழல் என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சோதனை ஓட்டத்தின்போதே இடிந்து விழுந்துவிட்டது என்றால், இதில் எப்படி மக்களை ஏற்ற முடியும்? ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டால், அவர்கள் எந்தப் பணத்தை வைத்து ரோப் கார் அமைப்பார்கள். ஊழல் ஆட்சியால் மக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுகிறது என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.