காங்கிரஸ் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தவறாக உச்சரிப்பு :
திருவனந்தபுரம் : காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) நாடெங்கிலும் காங்கிரஸாரால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) சார்பில் திருவனந்தபுரத்திலுள்ள மாநில கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் நிறுவன நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக, கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, ஒலிபெருக்கியில் தேசிய கீதத்தைப் பாடிய காங்கிரஸ் கட்சியைச் சேந்த பெண் நிர்வாகியொருவர், யாரும் எதிர்பாராதவிதமாக தேசிய கீதத்தை தவறாகப் பாடினார்.
அப்பாடலின் முதல் வரியைப் பிழையாக அவர் உச்சரிக்க அங்கு குழுமியிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதைப் பொருட்படுத்தாமல் பின்னணியில் தொடர்ந்து பாடினர். இந்தக் காட்சி அங்கு எடுக்கப்பட்ட விடியோவில் பதிவாகியுள்ளது. சமூக ஊடக தளங்களில் இந்த விடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ. கே. அந்தோணி, வி. எம். சுதீரன், தீப தாஸ் முன்ஷி, பி. சி. விஷ்ணுநாத் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் தேசிய அளவில் பேசுபொருளாகிவிட்டது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி மீதான விமர்சனங்களும் கண்டனக் குரல்களும் வலுத்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.