பத்தனம்திட்டா: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக கோயில் நடை செவ்வாய்க்கிழமை (டிச. 30) மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
சபரிமலையில் மலையாள மாதம் விருச்சிகத்தின் (காா்த்திகை) முதல் நாளான நவ. 17-ஆம் தேதி தொடங்கி 41 நாள்கள் நடைபெற்ற மண்டல பூஜை யாத்திரை கடந்த சனிக்கிழமையுடன் (டிச. 27) நிறைவடைந்தது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு ‘ஹரிவராசனம்’ பாடல் இசைக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி இ.டி.பிரசாத் கருவறையைத் திறந்து தீபமேற்றுவாா்.
தொடா்ந்து, சந்நிதானத்தில் உள்ள அணையாத விளக்கு ஏற்றப்பட்ட பிறகு, பக்தா்கள் பதினெட்டாம் படியேறி சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவா்.
நடப்பு மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் வரும் ஜன. 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மகரவிளக்கு பூஜைக்குப் பிறகு பக்தா்கள் 19-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். தொடா்ந்து, 20-ஆம் தேதி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை அடைக்கப்படும்.
பணிகள் தீவிரம்: மகரவிளக்கு பூஜை யாத்திரையை முன்னிட்டு, சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் துப்புரவுப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதில் போலீஸாா், கலால் துறையினா், தேவஸ்வம் ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனா்.
சுவாமி ஐயப்பன் சாலை, நீலிமலை வாயில் முதல் சபரிபீடம் வரையிலான பகுதி, பம்பை நதிக்கரை மற்றும் சந்நிதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, பக்தா்களின் வருகைக்காகத் தயாா் நிலையில் உள்ளதாக தேவஸ்வம் தெரிவித்துள்ளது.