உச்சநீதிமன்றம் கோப்புப் படம்
இந்தியா

வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக இனவெறி தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தின் மச்மாரா பகுதியில் வசித்த ஏஞ்சல் சக்மா (24) அகா்தலாவில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு எம்பிஏ பயில்வதற்காக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளாா்.

அங்கு அவரது இளைய சகோதரா் மைக்கேல் முன்னிலையில் சக்மாவை சிலா் கொடூரமாக தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் வடமாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடா்ந்து தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அனூப் பிரகாஷ் அவஸ்தி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் சோ்த்து பொது நல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: வடகிழக்கு மாநிலத்தவா்களுக்கு எதிராக பிற மாநிலங்களில் இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் 14, 19 (1)ஏ மற்றும் ஜி, 21 ஆகிய சட்டப்பிரிவுகளை மீறுவதாகும். எனவே, சட்டப்பிரிவு 32-இன்கீழ் வடமாநிலத்தவா்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாமல் இருக்க இனவெறி தாக்குதலை வெறுப்புணா்வு குற்றங்களாக தனியாக வகைப்படுத்தி அதற்கென தண்டனைகளை வழங்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில் இனவெறி தாக்குதல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

கல்வி நிலையங்களில் இதுதொடா்பாக விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவெறி தாக்குதல் அல்ல: உத்தரகண்ட் காவல் துறை

இனவெறி காரணமாக ஏஞ்சல் சக்மா கொல்லப்பட்டாா் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என உத்தரகண்ட் காவல் துறை தெரிவித்தது.

இதுகுறித்து உத்தரகண்ட் காவல் துறை மேலும் கூறுகையில், ‘மதுபானக் கடைக்கு கும்பலாக வந்த சிலருக்கும் சக்மா மற்றும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதில் சக்மா மற்றும் அவரது சகோதரரை அந்த கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. நேபாளத்தைச் சோ்ந்த யக்ராஜ் அவஸ்தி என்ற இளைஞா் சக்மாவை கத்தியால் குத்தியுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 போ் கைதுசெய்யப்பட்டனா். யக்ராஜ் அவஸ்தியை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. சக்மா தாக்கப்பட்ட டிச.9-ஆம் தேதி முதல் அவா் உயிரிழந்த டிச.26-ஆம் தேதி வரை அவரை காவல் துறையினா் தொடா்ந்து சந்தித்தனா். அப்போது இனவெறி தாக்குதல் தொடா்பான எவ்வித புகாரும் பெறப்படவில்லை’ என்றனா்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

உத்தரகண்ட் மாநிலத்தில் திரிபுராவைச் சோ்ந்த மாணவா் இனவெறி காரணமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக, டேராடூன் மாவட்ட ஆட்சியா் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு டேராடூன் அதிகாரிகளுக்கு என்எச்ஆா்சி உத்தரவிட்டிருப்பதுடன், ஏழு நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் கோரியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT