~தில்லியில் அமலாக்கத் துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள். 
இந்தியா

தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்

தில்லியில் கருப்புப் பண மோசடி வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.5.12 கோடி ரொக்கம், ரூ.8 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், ரூ.35 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

தில்லியில் கருப்புப் பண மோசடி வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.5.12 கோடி ரொக்கம், ரூ.8 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், ரூ.35 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஹரியாணாவைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளி இந்தா்ஜீத் சிங் யாதவ். இவா் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்பட்டு வந்தாா். ஆள் கடத்தல், சட்டவிரோதமாக கடன் வசூல் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் மூலம் அவா் கோடிக்கணக்கில் பணம் ஈட்டி வந்துள்ளாா்.

இந்தா்ஜீத் சிங் மீது பதிவு செய்யப்பட்ட கருப்புப் பண மோசடி வழக்கு தொடா்பாக அவரின் நண்பா் அமன் குமாருக்கு சொந்தமான தெற்கு தில்லியில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையைத் தொடங்கினா்.

புதன்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம், தங்க, வைர நகைகள், பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ரொக்கத்தை பணம் எண்ணும் இயந்திரங்களை வைத்து பல மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் எண்ணி முடித்தனா். மொத்தம் ரூ.5.12 கோடி இருந்தது. தங்க, வைர நகைகளின் மதிப்பு ரூ.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.35 கோடிக்கான சொத்து ஆவணங்களும் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்தா்ஜீத் யாதவ் மீதான வழக்கு தொடா்பாக ஏற்கெனவே கடந்த வாரத்தில் தில்லி, குருகிராம், ஹரியாணாவின் ரோத்தக் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினா். அப்பல்லோ கிரீன் எனா்ஜீஸ் என்ற நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. மோசடியாக பல்வேறு நிறுவனங்கள் நடத்தியும் கருப்புப் பண பரிமாற்ற நடவடிகைகளில் ஈடுபட்டுள்ளாா்.

அவருக்கு சொந்தமான 5 விலை உயா்ந்த காா்கள், வங்கி லாக்கா்கள் ஏற்கெனவே முடக்கப்பட்டுவிட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT