புது தில்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா குறித்து தொழில்துறையினர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வருமான வரிச் சட்டம், 1961க்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா, ஆறு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு, வரி செலுத்துபவர்களுக்கு அந்த நடைமுறையை எளிதாக்குவதற்கும், படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதாக்கும் வகையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் ஒட்டுமொத்த நடைமுறையை எளிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மசோதா வரைவு தயாரிக்கப்பட்டிருப்பதாக ரவி அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், பழைய விதிகள் நீக்கப்பட்டு, புதிய விதிகள் சுருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தொழில்துறையினர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்ட ரவி அகர்வால், பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட ஐடி ரிட்டர்ன்கள் (ஐடிஆர்-யு) மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 90 லட்சம் வருமான வரிக் கணக்கு ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் இதன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.8,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிப். 1ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு தற்போதைய வரம்பான இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதன் மூலம், வருமான வரித்துறையானது மக்களை வரிச் செலுத்துவதில் பங்கேற்க வைக்கும் அணுகுமுறையைத்தான் பின்பற்றுவதாகவும் மக்களுக்கு வருமான வரித்துறை எதிரி போன்ற அணுகுமுறையை பின்பற்றுவதில்லை என்றும் அகர்வால் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.